நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் மறியல்
விழுப்புரம், : தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், வெள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்கக் கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 11.50 மணிக்கு தொடங்கி 12.10 மணி வரை மறியல் நடந்தது. டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையிலான போலீசார் சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு, அழைத்து வந்தனர். உள்ளே கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில், விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து, பெருந்திட்ட வளாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.டி.ஆர்.ஓ., ராஜ்குமார் வந்து பேசினார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கவில்லை, பாதித்த வீடுகளுக்கும் நிவாரணம் தரவில்லை. அரசாணை வரவில்லை என கூறி, கிராமங்களில் அலுவலர்கள் கணக்கெடுக்க மறுக்கின்றனர்' என புகார் கூறினர்.வேளாண் இணை இயக்குநர் சீனுவாசன், துணை இயக்குநர் அன்பழகன் வந்து, இதுவரை எடுத்த புள்ளி விவரங்களை குறிப்பிட்டனர். சவுக்கு, தோட்டப்பயிர் போன்ற அனைத்து பயிர் பாதிப்புகளையும் கணக்கெடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, மதியம் 1.20 மணிக்கு மறியலை கைவிட்டனர். அய்யாக்கண்ணு கூறுகையில் 'சாகுபடி செலவினங்களை கணக்கிட்டு, நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்' என்றார்.