உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழைக்காலத்தில் தோட்டக்கலை பயிர் பாதுகாப்பு... அவசியம்: விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

மழைக்காலத்தில் தோட்டக்கலை பயிர் பாதுகாப்பு... அவசியம்: விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் மழைக்காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பதற்கான ஆயத்தப்பணியில் ஈடுபட வேண்டும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளால் விவசாயிகளுக்கு விரிவான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வரும் நிலையில், பயிர்களில் நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மரங்களைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டும், கவாத்து செய்தும், மரத்தின் சுமையை குறைத்து, காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வேண்டும். தென்னை பயிருக்கு, உரிய நேரத்தில் தேங்காய், இளநீரை அறுவடை செய்தல் மூலம் காற்று மற்றும் புயலினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கலாம். மரத்தின் கீழ் சுற்றில் உள்ள கனமான, பழைய ஓலைகளை வெட்டி அகற்றுவது மூலம் மரத்தின் சுமையை குறைத்து, காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். மா மரங்களில், காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கும் குச்சிகளால் கட்ட வேண்டும். கொய்யா, மாதுளைக்கும் கவாத்து செய்ய வேண்டும். வாழை தோட்டங்களில், காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். தக்காளிக்கு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும். சூடோமோனாஸ் பூஞ்சான உயிரியல் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும். பந்தல் காய்கறிகள் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். மரவள்ளி செடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். கிழிந்த போன நிழல் வலைகளை தைத்து சரிசெய்யவும், குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை