சம்பா நெல், ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா நெல் மற்றும் ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சீனிவாசன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், 2024-25ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சம்பா பருவத்திற்கு 13 தாலுகாக்களில் உள்ள 794 வருவாய் கிராமங்கள் இதற்கான அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.பயிர் காப்பீட்டு நிறுவனமாக யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு விவசாயி செலுத்த வேண்டிய பிரீமிய தொகை 517.5 ரூபாய் ஆகும்.உளுந்து பயிருக்கு 231 ரூபாய் செலுத்த, வரும் நவம்பர் 30 கடைசி தேதி. வேர்க்கடலை பயிருக்கு 442.5 ரூபாய் செலுத்த 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி. எள் பயிருக்கு 165 ரூபாய் மற்றும் கரும்பு பயிருக்கு 1,045 ரூபாய் செலுத்த 2025ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி.பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, விவசாயிகள் பயிர் காப்பீட்டுத்தொகை செலுத்தி பதிவு செய்யலாம்.மேலும் விபரங்களை அறிய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.