உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோடை காலத்தில் நிலத்தை தரிசாக விடாமல் மாற்றுப்பயிரிடுதல் அவசியம் : வேளாண்துறையினர் அறிவுரை

கோடை காலத்தில் நிலத்தை தரிசாக விடாமல் மாற்றுப்பயிரிடுதல் அவசியம் : வேளாண்துறையினர் அறிவுரை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கோடையில் நிலங்களை தரிசாக விடாமல், குறுகிய கால மாற்று பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என, வேளாண் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த நவரை பருவ நெல் மற்றும் ராபி பருவ பயிர்களின் அறுவடைக்கு பிறகு, கோடை வெயில் காரணமாக விவசாயிகள் பலர், தங்கள் நிலங்களில் பயிரிடுவதை தவிர்த்து, காலியாக வைத்துள்ளனர். அப்படி, விவசாய நிலங்களை தரிசாக விடாமல், விவசாயிகள், போதிய நீர்பாசன வசதியுடைய நிலங்களில், குறுகிய கால மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று, வேளாண்மை துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.இது குறித்து, விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கணேசன் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், கோடையில் குறைந்த அளவு பாசன நீரினை பயன்படுத்தி, குறுகிய கால பயிர்களான உளுந்து, எள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிடலாம்.இந்த பயிர்கள், வறட்சியை ஓரளவு தாங்கி நன்கு வளர்வதால், நீர் பாசன வசதியுடைய இடங்களில் குறைந்த அளவு நீரினை பயன்படுத்தி, இப்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். இந்த சித்திரை மாதத்தில், சாகுபடிக்காக நிலத்தை இரண்டு முறை கோடை உழவு செய்வதன் மூலம், நிலத்தில் உள்ள பூச்சி நோய் காரணிகள் மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன், நிலத்தில் காற்றோட்ட வசதியும் அதிகரிப்பதால், மண்ணின் வளமும் மேம்படுத்தப்படுகிறது. நிலங்களில் தானிய பயிர்களை தொடர்ந்து, பயறுவகை பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களையும் கோடை காலத்தில் மாற்றுப்பயிராக, விவசாயிகள் சாகுபடி செய்யலாம். இதன் மூலம், நிலத்தில் தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதுடன், மண்ணில் உள்ள உரச்சத்துக்களின் பயன்பாட்டையும் அதிகரிப்பதால், அடுத்து பயிரிடப்படும், வழக்கமான பயிரில் கூடுதல் மகசூல் பெற முடியும். எனவே, மாவட்டத்தில் போதிய நீர்பாசன வசதியுடைய நிலங்களை வைத்துள்ள அனைத்து விவசாயிகளும், தங்கள் நிலங்களை, கோடையில் தரிசாக விடாமல், கோடை உழவு செய்து, குறுகியகால மாற்றுப்பயிர்களை பயிரிட்டு, மண்ணின் வளத்தை காப்பதுடன், கூடுதல் வருவாயையும் பெறலாம் என்று, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி