விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் நீண்டகாலமாக உள்ள ரயில்வே கேட் மார்ச் 15 முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் அருகே திருச்சி நெடுஞ்சாலையில் கண்டமானடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி குடியிருப்புகளுக்கு ஜானகிபுரம் வழியாக 1.5 கி.மீ தொலைவில் உள்ளே செல்ல வேண்டும். இந்த வழியாகவே கொளத்துார் வி.அரியலுார், சித்தாத்துார், ரெட்டிப்பாளையம், காவணிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். இதன் வழியாகவே பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படுகிறது.இந்த நிலையில், வழியில் உள்ள ஜானகிபுரம் ரயில்வே கேட், வரும் மார்ச் 15ம் தேதி நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக நேற்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரத்திலிருந்து, ஜானகிபுரத்தின் வழியாகவே கண்டமானடி மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிராமத்திற்கும் செல்ல வேண்டும். மேலும், கண்டமானடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருந்து கிடங்கு, தலைமை தபால் நிலையம் போன்றவற்றிற்கு, மரகதபுரம், பிடாகம், கண்டம்பாக்கம், பெரியார்நகர், திருப்பச்சாவடிமேடு உள்ளிட்ட கிராமத்தினர், மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஜானகிபுரம் ரயில்வே கேட்டை மூடி சாலையை அடைத்து விட்டால், பல்வேறு கிராம மக்களும், உள்ளூர் மக்களும், மாணவர்களும் சென்று வர கடும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். புதிதாக அமைக்கப்பட்டு வரும் விழுப்புரம்-நாகை நான்கு வழிச்சாலை திட்டத்தில், ஜானகிபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.அதன் வழியாக 5 கி.மீ., தொலைவில் சுற்றி வழிவிடப்படும் என்கின்றனர். ஆனால், அந்த பணி முடிக்காமல் உள்ளதோடு, முடித்தாலும் ஆபத்தான நிலையில் நான்கு வழிச்சாலையை மக்கள் கடக்கவும், அதனால் பெரும் விபத்துகள் நேரிடும் என அங்குள்ள 5க்கும் மேற்பட்ட கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.