கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு பெண்களிடம் 6 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். விழுப்புரம் அருகே சிறுவந்தாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதில், சிறுவந்தாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற இதே கிராமத்தை சேர்ந்த உத்தமபுத்திரன் மனைவி அஞ்சலாட்சி,60; என்பவரின் 4 சவரன் நகை, புதுச்சேரி, புதுசாரம் பகுதியை சேர்ந்த ராஜா மனைவி தமிழ்செல்வி,54; என்பவரிடம் 2 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.நகையை பறிகொடுத்த இரு பெண்களும் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சமாதானம் செய்தனர்.இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.