| ADDED : பிப் 01, 2024 05:42 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பழமைவாய்ந்த ஏரி கல்வெட்டுகளை தொல்லியல் மாணவர்கள் மீளாய்வு செய்தனர்.தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியரும், தொல்லியல் வல்லுனருமான ராஜன் தலைமையில், தொல்லியல் ஆர்வலர் செல்வராஜ் மற்றும் வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், தமிழகத்தில் பல இடங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டு, பழைமை வாய்ந்த கல்வெட்டுகளை மீளாய்வு செய்து, அந்த கல்வெட்டுகளில் இருக்கும் தகவல்களை பதிவு செய்து, அதனை நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த வகையில் ராஜன் தலைமையிலான மாணவர்கள் குழுவினர், நேற்று விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைமை வாய்ந்த கல்வெட்டுகளை மீளாய்வு செய்தனர். விழுப்புரம் கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இவர்கள், அங்கிருந்த கல்வெட்டுகளை படி எடுத்து, மீளாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கு ஆயந்தூர் ஏரி தூம்பு கல்வெட்டு, ஆமூர் ஏரி தூம்பு கல்வெட்டு, முதலாம் பராந்தக சோழன் காலத்தை சேர்ந்த ஏரி கல்வெட்டு, மேல்வாலை ஏரி கல்வெட்டு, உடைந்த நிலையில் உள்ள தீவனூர் லட்சுமி நரசிம்மர் சாமி சிலை, செஞ்சி அரசலாபுரம் கோழி கல்வெட்டு உள்ளிட்ட கல்வெட்டுகளை அவர்கள் படி எடுத்து, தகவல்களை பதிவு செய்தனர்.மீளாய்வு குழுவினர் கூறுகையில், விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், கடந்த 29.7.1992ல், இந்த திறந்தவெளி அருங்காட்சியகம் துவக்கினர். மாவட்டத்தில் பல இடங்களில் கிடைத்த சிலைகள், கல்வெட்டுகளை கொண்டு வந்து வைத்தனர். பிறகு பராமரிப்பின்றிவிட்டுள்ளனர்.தற்போது, சுத்தம் செய்து அதிலிருந்த தகவல்களை பதிவு செய்கிறோம். இந்த கல்வெட்டுகள் பராமரிப்பின்றி உள்ளது. பொது மக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்றனர்.