நிலம் குறித்த விபரங்களை ஆன்லைன் மூலம் அறியலாம்; கலெக்டர் தகவல்
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நிலங்களின் விபரங்களை பொதுமக்கள் இணையவழி மூலம் அறிந்து கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களின், இணையவழி புலப்படங்கள், பட்டா, 'அ' பதிவேடு, வில்லங்க சான்று, நிலத்தின் மதிப்பீடு உள்ளிட்ட அனைத்து நிலப்பதிவுகளின் விபரங்களை அறிய, சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல தேவையில்லை. அவற்றை அறிய, https://tngis.tn.gov.in/apps/gi viewer/ என்ற இணையவழி மூலம் மக்கள் பயன்பெறும் புதிய வசதியை தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம், தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு போர்டலோடு ஒருங்கிணைத்து துவக்கி வைத்துள்ளனர். தற்போது இந்த புதிய சேவை மூலம் தமிழகம் முழுதும் உள்ள மக்கள் பொது சேவை மையங்கள் (இ சேவை) மூலமாகவும், புதிய சேவை மூலமும் தங்களின் நிலங்கள் விபரங்களை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இந்த இணையவழி மூலம் அறிந்து கொள்வதற்கும், விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.