தேசிய பெண் குழந்தை விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம்: தேசிய பெண் குழந்தை விருது பெற, தகுதி வாய்ந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது. அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்வது. பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது. குழந்தை திருமணங்களைத் தடுப்பது என அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இதனை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வீர தீர செயல்புரிந்த 13 வயதிற்குமேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ம் தேதி 'தேசிய பெண் குழந்தை விருது' வழங்கப்பட்டு வருகிறது.பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல் உள்ளிட்டவை தகுதிகளாக பரிசீலிக்கப்படும்.இந்த விருதினை பெற உரிய முன்மொழிவுகளை, சி.இ.ஓ., - டி.இ.ஓ., - சமூக நல அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், திட்ட அலுவலர், காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் விபரமறிந்து, தமிழக அரசின் இணையதளத்தில், (https://awards.tn.gov.in) என்கிற முகவரியில் வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்கறிப்பில் கூறப்பட்டுள்ளது.