உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நமது பள்ளி, நமது வாத்தியார் பேட்டி...

 நமது பள்ளி, நமது வாத்தியார் பேட்டி...

செஞ்சி நகரின் மகுடமாக திகழும் பள்ளி

செஞ்சிக்கு பெருமை சேர்ப்பதாக செஞ்சி கோட்டை இருப்பதை போல், செஞ்சி நகர மக்களின் மனதில் கோட்டை கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளியாக இந்த பள்ளி உள்ளது. எத்தனையோ வளர்ச்சியையும், மாற்றத்தையும் நகரம் சந்தித்துள்ள போதிலும், இன்று மட்டுமின்றி என்றைக்கும் செஞ்சியின் மகுடமாக இந்த பள்ளி இருக்கும். எனது தந்தை மஸ்தான் தற்போது எம்.எல்.ஏ.,வாக இப்பள்ளியின் தேவைகளை நிறைவு செய்து வருகிறார். அவரது வழியில் பேரூராட்சி சேர்மனாக உள்ள எனக்கு இந்த பள்ளியின் தேவைகளை நிறைவு செய்வதற்கு கிடைத்துள்ள வாய்பை பெருமையாக கருதுகிறேன். மொக்தியார் அலி, செஞ்சி பேரூராட்சி சேர்மன்

முதல் பெண் தலைமையாசிரியர் என்ற பெருமை உண்டு

2015ம் ஆண்டு பள்ளியின் நூற்றாண்டு விழாவின் போது இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்தேன். நுாற்றாண்டை நிறைவு செய்த இந்த பள்ளியில் முதல் பெண் தலைமையாசிரியராக நான் பணிபுரிந்ததை பெருமைக்குரியதாக கருதுகின்றேன். என்னுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் எனஅனைவரும் சேர்ந்து மிக சிறப்பாக விழாவினை கொண்டாடினோம். இன்று வரை இப்பள்ளி சிறப்பான கல்வி தரத்தை மாணவ மாணவியருக்கு அளித்து, சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. -விக்டோரியா. முன்னாள் தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செஞ்சி.

திருவள்ளுவர் வாக்கின்படி அறமும் ஒழுக்கமும்

நுாறு ஆண்டுகள் ஒரு பள்ளிக்கான சாதாரண எண்ணிக்கை அல்ல. ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை, ஒழுக்கத்தை, மனிதநேயம் எனப் பரிமாறிய காலத்தின் சாட்சியாகும். 'அறத்ததாடு நடுவு வேண்டும் கொல்லோ விருந்தோம்பல் செய்தற் பொருட்டு அல்லவை நீர்த்தாயாள் துணை' அறமும், ஒழுக்கமும் இருந்தால் கல்வி தானாக வளமுறும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க இன்று வரை நமது பள்ளி சான்றாக உள்ளது. ஏராளமான முன்னாள் தலைமை ஆசிரியர்கள், தன்னர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்கள், தங்களின் உள்ளத்தையும், உழைப்பையும் கொடுத்த பணியாளர்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு அவர்கள் செய்த பங்களிப்பை இன்று பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். இப்பள்ளியில் முன்னாள் மாணவி என்பதிலும், இந்நாள் தலைமை ஆசிரியர் என்பதிலும் பெருமை கொள்கிறேன். ஆயிஷா பேகம் தலைமையாசிரியர்.

கல்வியுடன் ஒழுக்கம் கற்பிப்பு

பள்ளி நுாற்றாண்டைக் கடந்த பெருமைக்குரியது. இந்த பள்ளியில் பயின்ற பலர் வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக உயர்ந்துள்ளனர். எத்தனை பள்ளிகள் வந்த பின்னரும் இன்று வரை சிறந்த பள்ளி என்ற பெருமைக்குரியது. இந்த பள்ளியில் பயின்று தற்போது நான் வழக்கறிஞராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் பணி செய்து வருகிறேன். அவ்வப்போது பள்ளிக்கு சென்று மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து தேவைகளை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியுடன், மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்பித்து நல்ல தரமான மாணவர்களை உருவாக்கி வருகின்றனர். -பொன்னம்பலம், முன்னாள் மாணவர், பேரூராட்சி கவுன்சிலர்.

பள்ளிக்கான தேவைகளில் கவனம் செலுத்தி வருகிறேன்

செஞ்சி நகர ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கல்வி தேவையை நிறைவு செய்யும் பள்ளியாகவும், தரமான கல்வியை வழங்கும் பள்ளியாகவும் உள்ளது. பழமை வாய்ந்த எத்தனையோ அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி மூட்பட்டுள்ளன. 110 ஆண்டை கடந்து விட்ட இந்த பள்ளியில் இன்று வரை மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதில் இருந்து பள்ளியின் தரத்தை புரிந்து கொள்ள முடியும். பள்ளி உள்ள பகுதியின் கவுன்சிலராக பணியாற்றி வரும் நான், முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி ஆகியோரின் வழிகாட்டுதலுடன் கல்வி தான் சமூகத்தை உயர்த்தும் என்பத உணர்ந்து பள்ளிக்கான தேவைகளை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன். -சுமித்ரா சங்கர், 9வது வார்டு கவுன்சிலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ