உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய ஊரக வேலைப்பணியை தொடர்ந்து முடக்கியதால் மக்கள் மறியல்: உபரிநீர் வரத்து வாய்க்காலில் பணியை மேற்கொள்ள வலியுறுத்தல்

தேசிய ஊரக வேலைப்பணியை தொடர்ந்து முடக்கியதால் மக்கள் மறியல்: உபரிநீர் வரத்து வாய்க்காலில் பணியை மேற்கொள்ள வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கள்ளிப்பட்டு கிராமத்தில், தேசிய ஊரக வேலைப்பணியை தொடர்ந்து முடக்கியதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அருகே சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய தொழிலை நம்பியுள்ள கூலி தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று, வலியுறுத்தி வருகின்றனர். கிராமத்தையொட்டி செல்லும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து, உபநிபரி நீர் வழிந்து செல்லும் ஏரி வாய்க்கால் ஒன்று, சின்னக்கள்ளிப்பட்டில் தொடங்கி, வடவாம்பலம், பூவரசங்குப்பம், சின்னமடம் வழியாக செல்கிறது. 90 அடி அகலம் உள்ள இந்த வாய்க்கால், பல இடங்களில் தூர்ந்து கிடப்பதாலும், பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், இந்த வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும், இதன் மூலம் சுற்று பகுதி கிராமங்களில் விவசாய பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீரோட்டமும் உயரும் என வலியுறுத்தி வந்த அந்த கிராம மக்கள், இந்த வாய்க்கால் சீரமைப்பு பணியை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செய்து தர வேண்டும் என்று, வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல முறை கோரிக்கை வைத்திருந்தனர்.எனினும், இந்த வாய்க்கால் பகுதியில், செங்கல் சூளை, விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, இந்த பணிகள் நடக்காமல் சிலர் தடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று அந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலைத்திட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். பணி தள பொருப்பாளர் வனிதா தலைமையில் காலை 10:00 மணிக்கு இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டுள்ளனர். தென்பெண்ணை உபரி நீர் செல்லும் அந்த ஏரி வாய்க்கால் சீரமைக்கும் பணியை தொடங்கியபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் செங்கல்சூளை வைத்திருந்ததால், அந்த பணியை தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.இது குறித்து கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால், விரக்தியடைந்த பொதுமக்கள், கள்ளிப்பட்டு பகுதி மெயின் ரோடுக்கு வந்து, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பகல் 12:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து கண்டமங்கலம் பி.டி.ஓ., சிவக்குமார் உள்ளிட்டோர் வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, உபரி நீர் செல்லும் ஏரி வாய்க்காலை அளவீடு செய்து கொடுக்கப்படும், அதன் பிறகு பணி நடக்கும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். இதனால், கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ