| ADDED : ஜன 18, 2024 04:18 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மருதம் அமைப்பு சார்பில் பொங்கல் கலை விழா இரு தினங்கள் நடந்தது.விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முதல் நாள் விழாவை முன்னாள் நகர சேர்மன் ஜனகராஜ் துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் ரவிகார்த்திகேயன் வரவேற்றார். சிலப்பதிகாரம் காட்டும் இலக்கிய சுவை என்ற தலைப்பில், பேராசிரியர் ஞானசம்பந்தன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி, துணை தலைவர் சித்திக்அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, தென்பெண்ணை இசைக்குழு முழக்கமும், மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ- மாணவிகளின் மங்கல இசையும், பிரம்மாலயா இசை நாட்டியப்பள்ளி மாணவர்களின் தமிழிசை நாட்டியமும் நடந்தது.நேற்று நடந்த இரண்டாம் நாள் விழாவில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பண்பாட்டு அசைவுகள், பாராட்டரங்கம், தமிழ்ச்சுவையுடன் இன்சுவை நூல் வெளியீடு, உணவுத் திருவிழா, மாணவர்களுடன் பொங்கல் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் எம்.பி.,ரவிக்குமார் கலந்துகொண்டு தமிழ் அமைப்பாளர்களுக்கு மருதம் விருது வழங்கி பாராட்டினார். விழாவில் எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.