உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில்  சிக்கல்: எஸ்.ஐ.ஆர்., பணிக்கு ஊழியர்கள் செல்வதால் பாதிப்பு

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில்  சிக்கல்: எஸ்.ஐ.ஆர்., பணிக்கு ஊழியர்கள் செல்வதால் பாதிப்பு

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு(எஸ்.ஐ.ஆர்.), ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பொது மக்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகின்றது. இந்த பணிகளில் வருவாய்த்துறை ஊழியர்கள், அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், நகராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரே நேரத்தில் நகராட்சி துப்புரவு பணியையும், எஸ்.ஐ.ஆர்.பணியையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களை, எஸ்.ஐ.ஆர்.பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 22 ம் தேதி முதல் தொடர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனனர். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1160 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் நகரப்பகுதிகளான திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 260 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் பணியாற்றும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், எஸ்.ஐ.ஆர்.பணியில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஏ.,க்களுக்கு உதவியாக வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்வது, டவுன் லோடு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர்.பணிக்கு செல்வதால், தாங்கள் பணியாற்றும் ரேஷன் கடைகளை பூட்டிவிட்டு அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பூட்டப்பட்டுள்ள கடையில் ''விற்பனையாளர் எஸ்.ஐ.ஆர்.பணிக்கு சென்றுள்ளதாக ''விளம்பர போர்டில் எழுதி வைத்துள்ளனர். ரேஷன் கடை பூட்டியுள்ளதால், பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல கடைகள் பூட்டியுள்ளதால், பொது மக்கள் கடைக்கு வந்து ஏமாந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு மாதத்தில் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் வாரத்தில் கடைசி இரண்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை வழங்கப்படுகின்றது. தற்போது எஸ்.ஐ.ஆர்.பணிகளுக்கு ஊழியர்கள் செல்வதால் ரேஷன் கடைகளை பூட்டி விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவாக ரேஷன் கடை ஊழியர்கள் எஸ்.ஐ.ஆர்.பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி எஸ்,ஐ.ஆர்.பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறுவதாக, ரேஷன் கடை விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், பொது மக்களுக்கு ரேஷன் கடை மூலம் அத்தியவாசிய பொருட்கள் வழங்கும் பணிகள் பாதிக்காத வகையில் எஸ்.ஐ.ஆர்.பணியில் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை