வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல்
விழுப்புரம்; விழுப்புரம் அருகே வாலிபரை தாக்கிய கும்பலை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் வேல்முருகன், 25; பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகப்பன் மகன் வல்லரசு, 30; இவர்களுக்கிடையே, வீட்டு சாக்கடை பிரச்னை குறித்து தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. கடந்த 30ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, வல்லரசு மற்றும் அவரது உறவினர்களான கனகராஜ், அய்யப்பன், மணிகண்டன் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர். இது குறித்து, வல்லரசு உட்பட 4 பேர் மீது வளவனுார் போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேல்முருகனின் சகோதரர் செந்தில்முருகன் தலைமையில் அவரது உறவினர்கள், நேற்று காலை 10:30 மணிக்கு, வளவனுார் கடை வீதி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேல்முருகனை தாக்கியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். வளவனுார் போலீசார் விரைந்து வந்து, அவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து 10:45 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.