ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வீட்டில் 8 சவரன் நகை, பணம் கொள்ளை
விழுப்புரம்:விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வீட்டின் பூட்டை உடைத்து, 8 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த சாலாமேடு சர்வேயர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன்,62; ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர், தனது மகன் திவாகரன், 40; என்பவருடன் வசித்து வருகிறார்.தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக, 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, தனது மகன் திவாகரன் மற்றும் குடும்பத்தினருடன் குற்றாலம் சுற்றுலா சென்றிருந்தனர்.நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, அறையிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து 8 சவரன் நகை, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.இது குறித்து, திவாகரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விசாரித்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.