விழுப்புரம் : விழுப்புரத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அவசர கதியில் சாலை போடுவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.விழுப்புரம் நகராட்சியில், விரிவாக்கம் செய்யப்பட்ட 6 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது. இதனால், பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என 2 ஆண்டுகளாக, கவுன்சிலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தற்போது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் சிமென்ட் சாலைப் பணிகள் நடக்கிறது. மருதுார் சுப்ராயலு தெருவில், சாலை சேதமடைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக இருந்தது. நேற்று முன்தினம் அங்கு திடீரென ஜல்லி, எம் சாண்ட் கொட்டப்பட்டு, ஒரே நாளில் சிமென்ட் சாலை போடப்பட்டுஉள்ளது.இதே போல், சாலாமேடு மணி நகரில் 3வது, 4வது தெருக்களில் பாதாள சாக்கடை முடிந்து நீண்ட நாட்கள் சேதமடைந்து கிடந்த சாலையில், திடீரென சிமென்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தேர்தல் அறிவிப்புக்குப்பின் எப்படி பணி நடைபெறலாம். அதுவும் தரமற்ற நிலையில் அவசர கதியில் நடக்கிறது என விமர்சனம் எழுந்தது. கமிஷனர் விளக்கம்
இது குறித்து, நகராட்சி கமிஷனர் ரமேஷிடம் கேட்டபோது, 'புதிதாக சிமென்ட் சாலைப் பணி எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே, பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்கள் மற்றும் சேதமடைந்த பழைய சாலையை புதுப்பிக்கவும், கடந்தாண்டு டெண்டர் விடப்பட்ட அந்த பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது.கடந்த ஜூலை மாதத்தில் 80 சாலைக்கு டெண்டர் விட்டு, 60 சாலைப் பணி முடிந்து, மீதமுள்ள சாலை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 23ம் தேதி சாலைக்கான புதிய டெண்டர் விட்டு பணி தொடங்க இருந்தது. அதனை மட்டும் நிறுத்தி வைத்துள்ளோம். தேர்தல் முடிந்ததும் அந்த பணிகள் நடக்கும், விதிமீறல் ஏதும் இல்லை' என்றார்.