தொடர் விடுமுறை எதிரொலி: வாகனங்கள் அணிவகுப்பு
விக்கிரவாண்டி: பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக விடுமுறையை கழிக்க சுற்றுலா தலங்களுக்கு வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் ஜன.1ம் தேதி வரை பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வார விடுமுறை சனி, ஞாயிறு இரு நாட்கள் உள்ளதால் நேற்று முன்தினம் முதல் ஊட்டி, கொடைக்கானல், பழனி, திருச்செந்துார், கேரளா ஐயப்பன் சுவாமி கோவில் போன்ற இடங்களுக்கு செல்ல திட்டமிட்ட பொதுமக்கள் கார், வேன், பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அன்று தென் மாவட்டங்களை நோக்கி 38 ஆயிரம் வாகனங்கள் சென்றன.நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று இரவு 7.00 மணி வரை 35 ஆயிரம் வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றன. நேற்று முன்தினம் தினசரி சராசரியாக செல்லும் 24 ஆயிரம் வாகனங்களை விட 14 ஆயிரம் வாகனங்களும், நேற்று கூடுதலாக இரவு 7 மணி வரை 11ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன.