விழுப்புரம்: திண்டிவனம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் எதிரே விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில், நகாய் சார்பில் இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, சப்வே அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. திண்டிவனம் நேரு வீதியில் செயல்பட்டு வந்த அனைத்து நீதிமன்றங்களும், கடந்த 2017ம் ஆண்டு, திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் ஜக்காம்பேட்டை பகுதியில் புதிதாக 19 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கோர்ட் இருப்பதால் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கத்திலிருந்து கோர்ட்டுக்கு வருபவர்கள், விபத்தை சந்திக்கும் நிலைமை தொடர்ந்தது.திண்டிவனத்திலிருந்து வாகனங்களில் வருபவர்கள் கோர்ட்டுக்கு அடுத்துள்ள தென்பசார் கிராமத்தில் உள்ள சாலை வழியாக 'யூ டர்ன்' செய்து வரவேண்டும். இதனால் சுலபமாக வருவதற்காக சாலை விதிகளை மீறி எதிர்புறமாக வருவதால் கோர்ட் ஊழியர்கள், பொது மக்கள் என பலர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.இதனால் வழக்கறிஞர்கள் சங்கம், பொதுமக்கள் என பல தரப்பினர். கோர்ட்டுக்கு வர தனியாக சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்பேரில், தமிழக அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஜக்காம்பேட்டை கிராமம் வழியாக கோர்ட்டிற்கு புதியதாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை அதிக அளவில் யாரும் உபயோகப்படுத்தவில்லை.இந்நிலையில், நிரந்தரமாக சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில், இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை போடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படி, திண்டிவனம் - விழுப்புரம் மார்க்கத்தில் உள்ள ஜக்காம்பேட்டை சர்வீஸ் சாலை கோர்ட் வரையிலும், விழுப்புரம் - திண்டிவனம் மார்க்கத்தில் தென்பசாரிலிருந்து ஜக்காம்பேட்டை வரையிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளது.இந்தப்பணிகள் முடிந்த பிறகு, கோர்ட் எதிரிலுள்ள பிரதான சாலையில் அனைத்து வாகனங்களும் சாலையை கடக்கும் வகையில் சப்வே அமைக்கப்பட உள்ளது.தற்போது இரண்டு பக்கமும் உள்ள சர்வீஸ் சாலையில் பழமை வாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது.இவ்வாறு அப்புறப்படுத்த்ப்படும் மரங்கள் (புளிய மரங்கள், பனை மரங்கள் தவிர), திண்டிவனம் அடுத்த தென்பசார் உள்ளிட்ட சாலையோரம் காலியாக உள்ள இடத்தில் மீண்டும் நடுவதற்கு நகாய் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பொக்லைன் உதவியுடன் மரங்கள் வேரோடு அப்புறப்படுத்தப்பட்டு, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றது.இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை போடுவதற்காக கோர்ட் எதிரில் 1 கி.மீ., துாரத்திற்கு மேல்உள்ள பகுதியில் 500க்கு மேற்பட்ட மரங்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளது.இதில் மீண்டும் வளரும் தன்மையுடைய மரங்கள் மட்டும், வேறு இடத்தில் நடப்பட்டு, நகாய் சார்பில் பரமாரிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.