| ADDED : நவ 21, 2025 05:13 AM
கண்டாச்சிபுரம்: விழுப்புரம் பகுதியில் கரும்பு விவசாயிகள் கரும்பு நடவுப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 1 மாத காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் அடுத்த கொடார், நேமூர், கஞ்சனுார், வளவனுார், கூட்டேரிப்பட்டு, திருக்கனுார் பகுதிகளில் கரும்பு விவசாயிகள் கரும்பு நடுவதற்கான உழவுப்பணிகள், விதைக்கரணை அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பெஞ்சால் புயலால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, தமிழக அரசின் ஊக்கத்தொகை மற்றும் பருவ நிலை காரணமாக கரும்பு நடவில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஏற்கனவே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாலும் மேலும் கரும்பில் இடை உழவு, மண் அணைத்தல், கரும்பு அறுவடை ஆகியவற்றிற்கு இயந்திரங்கள் உள்ளதாலும் கரும்பு விவசாயம் இந்த ஆண்டு கூடுதலாகி உள்ளது.இந்த ஆண்டுக்கான கரும்பு விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பதோடு, மாநில அரசின் ஊக்கத்தொகை 349 ரூபாயும் சேர்த்தால் கரும்பு டன் ஒன்றுக்கு 3 ஆயிரத்து639.50 ரூபாய் வரை கிடைக்கிறது. மற்ற பயிர்களின் விலையைக் காட்டிலும் தற்போதைய கரும்பின் விலை மிகவும் லாபகரமாக உள்ளதால் விவசாயிகள் விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு நடவில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.