உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகரப்பகுதி ரேஷன் கடைகளுக்கு மட்டும் பாமாயில் வழங்கல்: விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மக்கள் அதிருப்தி

நகரப்பகுதி ரேஷன் கடைகளுக்கு மட்டும் பாமாயில் வழங்கல்: விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மக்கள் அதிருப்தி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில், நகரப்பகுதி ரேஷன் கடைகளுக்கு மட்டும் பாமாயில் வழங்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்பகுதி பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு வழங்காதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ், 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மே மாதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பாமாயில், துவரம் பருப்பிற்கான ஒப்பந்த புள்ளி முடிவுகள் மேற்கொள்வதில் காலதாமதமாகிவிட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் கூறப்பட்டது. இதற்கிடையில் அரசு தரப்பில், மே மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாதவர்கள், ஜூன் முதல் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட வழங்கல் அலுவலர்கள் சார்பில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுஇந்த சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நகரப்பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பாமாயில் மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் துவரம் பருப்பு வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 1,255 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் நகரப்பகுதியிலுள்ள ரேஷன் கடைகளுக்கு மட்டும் பாமாயில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்பகுதியில் ஒரு சில கடைளுக்கு மட்டும் விற்பனையாளர்களின் செல்வாக்கு காரணமாக பாமாயில் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கிராமப்பகுதியிலுள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்படாமல் உள்ளது, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதேபோல் நகரப்பகுதியில் பாமாயில் வழங்கப்பட்டுள்ள நிலையில், துவரம் பருப்பு எப்போது வழங்கப்படும் என்று தெரியவில்லை. இதற்கிடையில் லோக்சபா தேர்தல் முடிவு ஜூன் 4 ம் தேதி வெளியாக உள்ளது. அரசு தரப்பில் ஜூன் முதல் வாரத்தில் பாமாயில், துவரம் பருப்பு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவிற்கு பிறகு, தேர்தல் நடத்தை விதிகள் விளக்கி கொள்ளப்படும். அடுத்த மூன்று நாட்களுக்குள் எப்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விடுபட்டவர்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு வழங்க முடியும் என்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நகரப்பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கப்பட்டது போல, கிராமப்பகுதியிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயில் வழங்குவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி