உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  புதிய பஸ் நிலையத்திற்கு யார் பெயரை வைப்பது திண்டிவனத்தில் தொடரும் குஸ்தி

 புதிய பஸ் நிலையத்திற்கு யார் பெயரை வைப்பது திண்டிவனத்தில் தொடரும் குஸ்தி

தி ண்டிவனம் - சென்னை சாலையில், நகராட்சி சார்பில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பஸ் நிலையத்திற்கு பெயர் வைப்பது தொடர்பாக சில மாதங்களுக்கு முன் நடந்த நகர மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களுக்குள் விவாதம் நடந்தது. மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில், ஆளுங்கட்சிக்கு 26 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்ததால், புதிதாக திறக்கப்பட உள்ள நகராட்சி பஸ் நிலையத்திற்கு, 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்' என பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, அண்ணா துரை, முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர்., உள்ளிட்ட பெயர்களை வைக்க வேண்டும் என எதிர்கட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தும் எடுபடவில்லை. இதற்கிடையே நகராட்சியில் ஏற்கனவே யார் பெயர் வைப்பது என முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சில நாட்களாக யார் பெயரை வைக்க வேண்டும் என தி.மு.க.,வைத் தவிர பிற கட்சிகள் திடீரென களத்தில் குதித்து கோரிக்கை வைக்கின்றன. இதில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 'ஓய்மா நாடு' எனும், திண்டிவனத்தை சங்க காலத்தில் அரசாட்சி செய்த 'ஓய்மான் நல்லியக்கோடன்' பெயரை திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்திற்கு வைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் திண்டிவனத்தில் நடந்த தமிழ்நாடு ரெட்டி சங்கத்தினர் முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் (ஓ.பி.ஆர்.,) பெயரை வைக்க வேண்டும் எனவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், 'அன்னை இந்திரா காந்தி பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். பஸ் நிலைய கடைகளுக்கும் 'குஸ்தி' இந்த புதிய பஸ் நிலையத்தில் 67 கடைகள் கட்டப்பட்டுள்ளது. கடைகளுக்கான பொது ஏலம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி காலை 11:00 மணி வரையிலும், ஆன் லைன் மூலம் ஒப்பந்த புள்ளி கோருவதற்கு அன்றே 11:30 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர் அறிவிப்பால் ஆளுக்கொரு கடையை ஏலம் எடுக்க காத்திருந்த 33 கவுன்சிலர்களும் 'அப்செட்' ஆகியுள்ளனர். இந்நிலையில், நகராட்சியில் நேற்று காலை, அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ரகசிய கூட்டம் நடந்தது. இதில் ஆன் லைன் டெண்டர் ஏலம் விடுவதை நிறுத்த வேண்டும், கவுன்சிலர்களுக்கு தலா ஒரு கடை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பேசிய போது, டெண்டர் அறிவிப்பு வெளியான பிறகு தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிகாரிகள் ஒதுங்கிக் கொண்டனர். ஏற்கனவே ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்குள் கோஷ்டி பிரச்னை இருக்கும் நிலையில், தற்போது கடை ஒதுக்காதது மீண்டும் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி