காவல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் கடமையை நேர்மையாக செய்கின்றனரா,பொதுமக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுறதா, வழக்கு பதிவதில் அரசியல் தலையீடுகள் உள்ளதா, அரசியல், ஜாதி மோதல் ஏற்படும் சூழல் உள்ளதா என்பதை கண்காணித்து முன்னெச்சரிக்கையாக எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்க தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டது.இதற்கு நியமிக்கப்படும் போலீசார் சாதாரண உடையில் டீக்கடை, ஓட்டல், பஸ் நிலையம், உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் மக்களோடு பழகி அந்த பகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை இது போன்று நியமிக்கப்படும் தனிப்பிரிவு ஏட்டுக்கள் அனுபவம் மிக்கவராகவும், நடுநிலையானவராகவும், உள்ளூர் நிலவரம் தெரிந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள், காவல் நிலையத்திற்கு மிக அரிதாகவே வருவார்கள். இவர்கள் தரும் தகவல்கள் துல்லியமாகவும், பாரபட்சமின்றியும், நம்ப தகுந்ததாகவும் இருக்கும்.ஆனால் இன்றைய நிலமை தலைகீழாக மாறிப்போனது. காவல் நிலையத்தில் இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது.பெரும்பாலும் எஸ்.பி., எட்டுக்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்வதே இல்லை. காவல் நிலைய அதிகாரிகளுடன் நெருக்கமாக இருப்பதால் அவர்களின் தவறான நடவடிக்கை குறித்து எஸ்.பி.,க்கு தெரிவிப்பதில்லை.இவர்களின் உறக்கத்தினால் மாவட்டத்தில் மாணவர்களிடம் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பஸ் நிலையங்களில் காலை, மாலை வேளைகளில் பைக்குகளில் வரும் மர்ம நபர்களும், தின்பண்டங்களை விற்பனை செய்பவர் போன்றும் மாணவர்களிடம் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்கின்றனர்.பஸ் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசார் ஒன்றிரண்டு நாள் ரகசியமாக கண்காணித்தாலே மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர்களை கண்டு பிடிக்க முடியும். ஆனால் காவல் நிலையத்தையே சுற்றி வரும் தனிப்பிரிவு ஏட்டுகள் இதில் அக்கறை செலுத்துவதில்லை. இதே போன்று பெரும்பாலான கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனையும் கனஜோராக நடக்கிறது. ஒப்புக்காக பிடித்து வழக்குப் பதிந்தாலும் விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.மேலும், வழக்குப் பதிவதில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து விட்ட நிலையில், வழக்குகளின் உண்மை நிலை குறித்தும் எஸ்.பி.,க்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. முக்கியமான வழக்காக இருந்தாலும் கட்ட பஞ்சாயத்து செய்வதற்கு வசதியாக பல மணி நேரம் கழித்தே தகவல் தெரிவிக்கின்றனர்.செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் கடந்த 17ம் தேதி காணும் பொங்கல் அன்று விசாரணைக்குச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் சமூக வளைதளங்களில் பரவி விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது.காவல்துறை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்திலும், எஸ்.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உண்மை நிலையை சரிவர தெரிவிக்காமல், அரசியல் தலையீடும், கட்ட பஞ்சாயத்தும் நடக்க வழி செய்வதால் மக்கள் மத்தியில் மாவட்ட போலீசார் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.