விழுப்புரம், : மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்களை ஏலம் எடுக்கும் பதிவு பெற்ற வியாபாரிகள், குறிப்பிட்ட வைப்புத்தொகை செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் விவசாய விளைபொருட்கள் விற்பனை மையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ்,மார்க்கெட் கமிட்டிகளில் பணமில்லா பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக 100 கமிட்டிகள், 'இ-நாம்' எனப்படும் மின்னணு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, திண்டிவனம். அரண்டநல்லுார் (திருக்கோவிலுார்), விக்கிரவாண்டி, மரக்காணம் ஆகிய மார்க்கெட் கமிட்டிகளை ஆன்-லைன் முறையில் ஒருங்கிணைத்து, சந்தை நிலவரம், பொருட்களின் தினசரி விலை, முக்கிய பொருட்கள் வரத்து, வானிலை நிலவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.இந்த கமிட்டிகளில் தினந்தோறும் சராசரியாக ரூ.50 லட்சம் வரை விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அறுவடை சீசன் நேரத்தில் நெல், மணிலா, பருத்தி மற்றும் பல தானிய பொருட்கள் வரத்து பல மடங்கு அதிகரித்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்முதல் நடைபெறுகிறது. இ-நாம் திட்டத்தின் மூலம், விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு வழங்கியவுடன், பணத்துக்காக காத்திருக்க தேவையில்லை. அதற்கான தொகை, விவசாயியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும். வியாபாரிகளும், லட்சக்கணக்கான தொகையை பணமாக கமிட்டிக்கு கொண்டுவர தேவையில்லை.விவசாயிகளுக்கு ஆரம்பத்தில் நடைமுறை சிரமங்களை ஏற்படுத்திய இத்திட்டம், தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மின்னணு நடைமுறையில், விளைபொருட்களை கொள்முதல் செய்த வியாபாரிகள், இரு நாட்களில் பணத்தை செலுத்திட வேண்டும். பணம் செலுத்திய பிறகே விளைபொருட்கள், விடுவிக்கப்படும். கமிட்டியில் கொள்முதல் செய்த விளைபொருட்களுக்கான தொகையை பெரும்பாலான வியாபாரிகள் வங்கி கணக்கில் தாமதமின்றி செலுத்தி வருகின்றனர். ஒரு சில வியாபாரிகள் மட்டும் தொடர்ந்து, விவசாயிகளது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், விளைபொருட்களை விற்பனை செய்த விவசாயிகள் பலரும் தினந்தோறும் கமிட்டிக்கு, பணம் கேட்டு நடையாய் நடந்து வருகின்றனர். ஒரு சில வியாபாரிகளின் அலட்சியத்தினால் கமிட்டி அதிகாரிகளும் பரிதவித்து வருகின்றனர். இந்தப் பிரச்னையை தீர்க்க, விளைபொருட்களை ஏலம் எடுக்க முன் வரும் வியாபாரிகள் லைசென்ஸ் எடுத்தால் மட்டும் போதாது, குறிப்பிட்ட வைப்புத்தொகையை மார்க்கெட் கமிட்டி வங்கி கணக்கில் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் கால தாமதம் செய்கின்ற வியாபாரிகளின் வைப்புத்தொகையில் இருந்து மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் நேரடியாக விவசாயிகளுக்கு தொகையை பட்டுவாடா செய்வதற்கு வழி பிறக்கும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.