உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு

செஞ்சி : செஞ்சி கோட்டை அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் கடையை மூடி விட்டதாக தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். செஞ்சி நகரில் செஞ்சி கோட்டை அருகே பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் குடியிருப்பு பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும் பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடை பொது மக்களுக்கு இடையூறாகவும், சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொது மக்கள் நீண்ட காலமாக கேட்டு வந்தனர். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கடையை நடத்தி வந்தனர். இதையடுத்து செஞ்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஆதிமூலம் சென்னை ஐகோர்டில் கடந்த ஜூலை 1ம் தேதி தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவட்சவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். மனுவை ஏற்ற நீதிபதிகள் எதிர் தரப்பினரான விழுப்புரம் கலெக்டர், எஸ்.பி., டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட 8 பேருக்கு பதில் மனு அளிக்க 3 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாகவும், பாதுகாப்பு குறைபாடு இருப்பதையும் உறுதி செய்து, கடந்த, ஜூலை 11ம் தேதி விழுப்புரம் கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மேலாளருக்கு அறிக்கை அனுப்பினர். இந்த வழக்கு கடந்த, 26ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எம்.எம். ஸ்ரீவட்சவா, சுந்தர் மோகன் ஆகியோரிடம் விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில் பொது மக்களின் ஆட்சேபனைக்குரிய டாஸ்மாக் கடையை கடந்த 21ம் தேதி மூடி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கார்த்திக்வருன், ஜோஷிகா ஆகியோரிடம் டாஸ்மாக் கடை மூடப்பட்டு விட்டதை கேட்டு உறுதி செய்து கொண்ட நீதிபதிகள் டாஸ்மாக் மேலாளரின் அறிக்கையை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை