உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் சுற்றுலாத்துறை அலுவலகம்... துவங்கப்படுமா? தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செஞ்சியில் சுற்றுலாத்துறை அலுவலகம்... துவங்கப்படுமா? தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செஞ்சி : செஞ்சி கோட்டைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் செஞ்சியில் சுற்றுலாத்துறை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஓட்டல் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டின் வளர்ச்சிக்கு உள் நாட்டு வரியை போன்றே, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் அன்னிய செலாவணியும் மிக முக்கியமானது. இயற்கை வளம் குறைவாக உள்ள சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய வருவாயாக சுற்றுலா உள்ளது. சுற்றுலா பயணிகளை அதிகம் வர வழைப்பதன் மூலம் அன்னிய செலாவணி மட்டுமின்றி உள் நாட்டில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்பையும் உருவக்க முடியும். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரமான மகாபலிபுரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் அந்த பகுதியில் நுாற்றுக்கணக்கான நட்சத்திர ஓட்டல்கள், சாதாரண ஓட்டல்கள், கைடுகள், கலைப்பொருட்கள் விற்பனை என அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர முக்கிய வருவாயாக சுற்றுலா உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடும் சுற்றுலா இடங்களில் செஞ்சி கோட்டை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.சென்னை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிஞ்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நடுத்தர மக்களின் சிக்கனமான சுற்றுலா தலமாக செஞ்சி கோட்டை உள்ளது. இந்திய தொல்லியல் துறையினர் செஞ்சி கோட்டையை புதுப்பித்து மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது.அடுத்த சில ஆண்டுளில் உலக பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் செஞ்சி 'பி'ஏரியில் படகு சவாரி விடுவதற்கு ஆய்வு நடத்தி உள்ளது. மிக விரைவில் படகு சவாரியும் துவங்கப்பட உள்ளது. ஆனால் இதுவரை செஞ்சியில் சுற்றலாத்துறை மூலம் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.சுற்றுலா தலமாக அறிவிக்காமல் இருப்பதால் பெரிய நிறுவனங்கள் நட்சத்திர ஓட்டல்கள் இங்கு துவங்கவில்லை. தற்போது செஞ்சிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியான ஓட்டல்கள் இல்லாமல் புதுச்சேரியில் தங்குகின்றனர்.எனவே, தமிழக அரசு செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து, சுற்றுலா பயணிகளை கவரும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். சுற்றுலாத்துறை அலுவலகத்தையும், தமிழ்நாடு ஓட்டலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு குறைந்த செலவிலான விடுதிகளையும் தமிழக அரசு அமைக்க வேண்டும். இதன் மூலம் செஞ்சி கோட்டையை காணவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து, அரசுக்கு அன்னிய செலாவணியும், செஞ்சி நகர மக்களுக்கு வருவாயையும் அதிகரிக்கும். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ