விழுப்புரத்தில் ஆட்டோக்களில் போக்குவரத்து போலீசார் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆட்டோக்களில் திடீர் ஆய்வு நடத்திய போக்குவரத்து போலீசார், விதிமீறி இயக்குவதை தடுப்பதற்கு ஆவணங்களை கேட்டு நடவடிக்கை எடுத்தனர்.விழுப்புரம் நகரில் ஆட்டோக்கள் அதிகமாக இயக்கப்படும் நிலையில், பல ஆட்டோக்கள் விதிமீறி இயக்கப்படுவதாக எழுந்த புகார்களின் பேரில், விழுப்புரம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கம் ஆகியோர் நேற்று, விழுப்புரம் புதிய பஸ் நிலையம், சிக்னல் சந்திப்பு, காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி, திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆட்டோக்களுக்கான பர்மிட், இன்சூரன்ஸ், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதாக என கேட்டு ஆய்வு செய்தனர். அப்போது, சில ஆட்டோக்கள் ஆவணங்களின்றி இயக்கி வருவது தெரிந்தது. இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுனர்களை எச்சரித்த போக்குவரத்து போலீசார், நாளை முதல் ஆட்டோக்களில் திடீர் ஆய்வு நடத்தப்படும், அப்போது ஆட்டோ டிரைவர்கள் பர்மிட், ஆர்.சி., புக், லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும், ஆய்வின்போது இல்லாமல் இருந்தாலும், அனுமதியின்றி, விதிமீறி ஆட்டோக்கள் இயக்குவது தெரிந்தாலும், வழக்கு பதிந்தும், ஆட்டோக்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும், சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என எச்சரித்து, அறிவுரை வழங்கினர்.