உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தபால் ஓட்டு போடும் பணி துவங்கியது! மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தபால் ஓட்டு போடும் பணி துவங்கியது! மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளில் ஈடுபடும் போலீசார் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டுகளை செலுத்தினர். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, இந்த தொகுதியில் 276 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 44 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானது, மிகவும் பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.ஓட்டுப்பதிவு நாளில், போலீசார் மற்றும் மத்திய துணை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். மேலும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் தங்களின் ஓட்டை பதிவு செய்வதற்காக தபால் ஓட்டு போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள 370 போலீசார் தபால் ஓட்டு போட உள்ளனர். இதையொட்டி, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில், போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது. நாளை 6ம் தேதி வரை நடக்கிறது. நேற்று நடந்த தபால் ஓட்டு போடும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார். தொடர்ந்து, தொகுதிக்குட்பட்ட பூத்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையை, தேர்தல் அலுவலர் பார்வையிட்டார். பின், ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு மைய செயல்பாடு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம், புகைப்படங்கள் கொண்ட பேலட் பேப்பர் பொருத்தும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இரு தினங்களில் முடித்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது.ஓட்டு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்படும் வரும் முன்னேற்பாடு பணிகள் பார்வையிட்டார். இங்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் பகுதி, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, கண்காணிப்பு கேமரா வசதி உட்பட பல்வேறு அடிப்படை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.எஸ்.பி., தீபக் சிவாச், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் அலுவலர் யுவராஜ், தனி தாசில்தார் (தேர்தல்) கணேசன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி