| ADDED : செப் 01, 2011 01:27 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்காக உடைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோனதால் தொற்றுநோய் அபாயம் உருவாகியுள்ளது. திருக்கோவிலூரில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்பு அகற்றம் துவங்கியது. பேரூராட்சி நிர்வாகம் இதனை துவக்கினாலும் நெடுஞ்சாலைத்துறை மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்றியது. அதுவும் இரண்டொரு நாட்கள் மட்டுமே நடந்தது. கீழையூர் கடலூர் மெயின்ரோடு, ஆஸ்பிட்டல் ரோடு, வடக்கு வீதி, மேலவீதிகளில் கழிவுநீர் கால்வாய்களில் இருந்த வீடுகளுக்கு செல்லும் படிகளை அகற்றினர். இதனை பேரூராட்சி நிர்வாகம் வருவாய்த்துறை, மின்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை கூட்டி வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட எந்த இடத்திலும் ஆக்கிரமிப்பு அகற்றத்தை நடத்தவில்லை என்பது வேறு கதை. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தப்பட்டிருப்பதாக பேரூராட்சி வட்டாரத்தில் விளக்கம் தெரிவிக்கப் பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் மீது வீடுகளுக்கு செல்ல போடப்பட்டிருந்த பிளாட்பார்ம்மை அகற்றியதால் கால்வாய் தூர்ந்துபோனது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக செவலை ரோட்டில் ஸ்ரீநிவாசா தியேட்டர் எதிரே கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. மேலவீதி, வடக்கு வீதிகளில் கழிவுநீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நிலஅளவைத்துறையினர் குறியிட்ட அளவு வரை ஆக்கிரமிப்பை அகற்றியிருந்தால் பாராட்டி இருக்கலாம். அதை விட்டுவிட்டு கண்துடைப்பிற்காக வீடுகளுக்கு செல்வதற்காக போடப்பட்ட பிளாட்பார்மை இடித்து கால்வாயை மூடி பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது பேரூராட்சி நிர்வாகம்.