| ADDED : ஆக 26, 2011 01:01 AM
கள்ளக்குறிச்சி : பல்வேறு பகுதிகளில் நூறு சவரனுக்கு மேல் நகை திருடிய நான்கு பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏமப்பேர் - தென்கீரனூர் சாலையில் உள்ள தென்னை மரத்தோப்பில் இரண்டு பேர் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த மாவூத் கிராமத்தை சேர்ந்த குமார், 36, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த சாலூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கர், 42 என்பது தெரிய வந்தது. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராபாளையம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கண்டமங்கலம், திருவண்ணாமலை, செங்கம், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் இரவு நேரங்களில் வீட்டில் நுழைந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலி உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளையடித்தும், சில வீடுகளில் புகுந்து திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரிடம் இருந்தும் சேலம் நகரைச்சேர்ந்த கனகராஜகணபதி நகர் தட்சணாமூர்த்தி, 53, மெய்யனூர் ரோட்டை சேர்ந்த பாஸ்கர், 28, ஆகியோர் 100 சவரனுக்கு மேல் திருட்டு நகைகளை வாங்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தட்சிணாமூர்த்தி, பாஸ்கர் ஆகியோரை கைது செய்த போலீசார் நான்கு பேரையும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.