| ADDED : செப் 26, 2011 10:44 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 198 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது. வரும் 29ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். நேற்று முன் தினம் வரை மாவட்டம் முழுவதும் 2,654 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று அமாவாசை இரவு 7.30 மணிக்கு துவங்கியது என்றாலும் திங்கட்கிழமை என்பதால் அதிகளவில் மனு தாக்கல் செய்தனர். இன்று பகல் முழுவதும் அமாவாசை என்றாலும் செவ்வாய்கிழமை என்பதால் நேற்றே அ.தி.மு.க., உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று வரை மாவட்டம் முழுவதும் உள்ள 47 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 29 பேரும், 473 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 359 பேரும், 1099 ஊராட்சி தலைவர் பதவிக்கு 1680 பேரும், 8,247 வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,481 பேரும், 3 நகராட்சி தலைவர் பதவிக்கு 5 பேரும், 96 நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 104 பேரும், 15 பேரூராட்சி தலைவர் பதவிக்கு 18 பேரும் மற்றும் 243 பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 176 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 223 உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று வரை 8,852 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று அமா வசை என்பதால் அதிகமானோர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.