| ADDED : ஆக 03, 2011 10:15 PM
மரக்காணம் : முருக்கேரி பி.எஸ்.என்.எல்., துணை தொலைபேசி நிலையம் சார்பில் சந்தாதாரர்களுக்கு இலவச சிம் கொடுத்தும் பயன் கிடைக்கவில்லை. திண்டிவனம் பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிலையம் மூலம் முருக்கேரி துணை தொலைபேசி நிலையம் இயங்கி வருகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிடாட் 256 என்ற இரண்டு போர்டுகள் மூலம் முருக்கேரி, சிறுவாடி, வேப்பேரி, ஆலங்குப்பம், வடகோட் டிபாக்கம் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஒயர்(கம்பி) வழியே தொலை பேசி இணைப்புகள் வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பகுதிகளில் சரியான முறையில் இணைப்புகள் இயங்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பிரச்னை தீராததால் சந்தாதாரர்கள் இணைப்புகளை துண்டித்து கொண்டனர். இணைப்புகள் குறைந்து விட்டதால் தற்போது சிடாட் 256 என்ற ஒரு போர்டு மட்டுமே இயங்கி வருகின்றது. எஞ்சியுள்ள ஒரு சில இணைப்புகளை தக்க வைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் சந்தாதாரர்கள் வீடுகளுக்கு பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சென்று வீட்டு போன்களுடன் இலவசமாக பேச 'என் நண்பன் சூப்பர்' என்ற இலவச சிம் கார்டுகளை வழங்கினர். அதனால் இணைப்புகளை துண்டிப்பது தற்காலிகமாக குறைந்தது. அந்த பகுதிகளில் டவர் சிக்னல் இல்லாததால் சிம்கார்டு அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இப் பிரச்னை குறித்து திண்டிவனம் துணை கோட்ட பொறியாளர் நடராஜன் கூறியதாவது : முருக்கேரி துணை தொலைபேசி நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் அதிகளவில் முருக்கேரியில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். திண்டிவனம் தாலுகாவில் டவர் சிக்னல் இல்லாத பகுதி முருக்கேரி மட்டும் தான். இது குறித்து பொதுமக்கள் பல புகார்கள் கொடுத்துள்ளனர். இப் பிரச்னை குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் அதிகளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.