உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவுப்பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி இலவசம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவிப்பு

மாவுப்பூச்சியை அழிக்கும் ஒட்டுண்ணி இலவசம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் அறிவிப்பு

திண்டிவனம் : மாவட்ட விவசாயிகளுக்கு மாவுப் பூச்சியை அழிக்கக்கூடிய ஒட்டுண்ணி இலவசமாக வழங்கப்படுகிறது. திண்டிவனம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில், பயிர்களில் தாக்கி கொல்லும் பப்பாளி மாவுப்பூச்சியை அழிக்கக் கூடிய அசிரோபேகஸ் ஒட்டுண்ணி, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறித்து எண்ணெய்வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி மற்றும் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் சாத்தையா தினமலர் நிருபரிடம் கூறியதாவது: கடந்த 2008 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக உள்ளது. அமெரிக்காவை பிறப் பிடமாக கொண்ட இந்த மாவுப்பூச்சி, பப்பாளி, மரவள்ளி, காட்டாமணக்கு, கொய்யா, பருத்தி, துவரை, மல்பெரி, செம்பருத்தி, காய்கறி, பழப்பயிர்கள், பூச்செடிகள் அலங்கார செடிகள் உள்ளிட்ட 60 வகையான தாவரங்களை தாக்குகிறது. பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்று அறிவியல் பெயர் கொண்ட மாவுப்பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கப்படும் தாவரம், இலைகள், நுனிக்குருத்துக்கள் வளர்ச்சிகுன்றி காணப்படும். தாக்குதல் தீவிரமாகும் போது தாவரம் காய்ந்து, இறந்துவிடும். பாதிக்கப்பட்ட தாவரத்தின் மீது எறும்புகளின் நாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பெங்களூரூவில் உள்ள தேசிய வேளாண் முக்கியத்துவ பூச்சிகள் ஆராய்ச்சி மையம் சார்பில், போர்டோரிக்கோ தீவுகளிலிருந்து மூன்று ஒட்டுண்ணிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் அதிகளவில் உற் பத்தி செய்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அசிரோபேகஸ் பப்பாயே என கூறப்படும் ஒட்டுண்ணி குளவிகள் 50 முதல் 60 முட்டைகள் வரை இடும். இவை 16 முதல் 18 நாட்களில் அடுத்த தலைமுறை பூச்சிகளை உருவாக்கும். இது 5 முதல் 7 நாட்கள் வரை உயிர் வாழும். இந்த குளவிகள் மாவுப்பூச்சியின் இரண்டாம் பருவநிலையின் போது தாக்கி அழிக்கின்றது. திண்டிவனத்தில் உள்ள எண்ணெய்வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி, ஒட்டுண்ணிகளை விவசாயிகள் இலவசமாக பெற்று பயனடையலாம். இவ்வாறு பேராசிரியர்கள் ராமமூர்த்தி, சாத்தையா தெரிவித்தனர். பூச்சியியல் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் செந்தில்வேல் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை