| ADDED : செப் 06, 2011 10:38 PM
xசெஞ்சி : செஞ்சி கோட்டையில் உள்ள 300 வயதுடைய ஆலமரங்களை காப்பாற்ற தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சி கோட்டையில் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் பாரம்பரியம் மிக்க வரலாற்று நினைவு சின்னங்கள் மட்டுமில்லை. இங்குள்ள மரங்களும் பாரம்பரியம் மிக்கவையே. முன்னூறு ஆண்டு கால வயதுடைய ஆலமரங்கள் செஞ்சிக்கோட்டையில் ஏராளமாக உள்ளன. இதில் சாதுத்துல்லாகான் மசூதி எதிரில் இருந்த இரண்டு பெரிய ஆலமரங்களும், ராஜகிரி மலையடிவார வளாகத்தில் இருந்த இரண்டு பெரிய ஆலமரங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேரோடு சாய்ந்தன. பிறகு இந்த இடத்தின் அழகும் பொலிவும் குறைந்து போனது. இந்த மரங்கள் வேரோடு சாய்வதற்கும், கிளைகள் ஒவ்வொன்றாக முறிந்து விழுவதற்கும் ஆலமரங்களை துளைக்கும் ஒருவகை வண்டுகளே காரணமாக உள்ளன.
இதனை தடுக்க பூச்சி கொல்லி மருந்துகளை தகுந்த இடைவெளியில் செலுத்துவதன் மூலம் வண்டுகளை அழித்து ஆலமரங்களை காப்பாற்ற முடியும் என்கின்றனர் வேளாண்மைத்துறையில் அனுபவம் பெற்றவர்கள். தற்போது செஞ்சிகோட்டை ராஜகிரி மலையடிவாரத்தில் நான்கு பெரிய ஆலமரங்களும், வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு ஆலமரமும், கிருஷ்ணகிரி கோட்டை டிக்கட் கவுண்டர் எதிரில் உள்ள ஒரு ஆலமரமும் இதே போல் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. இதில் உள்ள சில கிளைகள் வண்டு துளைத்ததால் பட்டு போய் உள்ளன. வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்த பெரிய ஆலமரத்தின் கிளை ஒன்று வண்டுகள் தாக்குதலுக்கு ஆளாகி நேற்று முன்தினம் இரவு முறிந்து விழுந்தது. இயற்கை எழிலோடு செஞ்சி கோட்டை காட்சியளிப்பதற்கு துணையாக இருக்கும் இந்த ஆலமரங்களை காப்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது. இந்திய தொல்லியல் துறையினர், வேளாண்மைத் துறையினருடன் இணைந்து பாரம்பரியம் மிக்க இந்த ஆலமரங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.