உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டுவது எப்போது: ஆய்வு முடிந்து 3 ஆண்டாகியும் நடவடிக்கை இல்லை

சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டுவது எப்போது: ஆய்வு முடிந்து 3 ஆண்டாகியும் நடவடிக்கை இல்லை

செஞ்சி: செஞ்சி பகுதியில் கனமழை பெய்து, சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் சென்றாலும் தடுப்பணை இல்லாததால் கோடையின் போது கிணறுகள் வறண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தடுப்பணைகளை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் 70 சதவீதம் விவசாயம் செய்யும் மக்கள் உள்ள பகுதியாக செஞ்சி தாலுகா உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு தேவையான தண்ணீரை செஞ்சி பகுதியில் பெய்யும் மழையில் இருந்தே பெறப்படுகிறது.செஞ்சி அடுத்த பாக்கம் மலைக் காடுகளில் துவங்கும் வராகநதியே செஞ்சி பகுதிக்கான தண்ணீர் தேவையை நிறைவு செய்து வருகிறது. வராக நதி செவலபுரை அருகே சங்கராபரணி ஆற்றில் இணைகிறது. சங்கராபரணி ஆறு வீடூர் அணையை கடந்து புதுச்சேரி வரை சென்று கடலில் கலக்கிறது.செஞ்சி பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தாலும், வராக நதியில் கட்டியுள்ள கூடப்பட்டு அணையில் இருந்து செஞ்சி, சிறுகடம்பூர், சிங்கவரம் பெரிய ஏரி உட்பட 5 ஏரிகளுக்கும், செவலபுரை தடுப்பணையில் இருந்து காரியமங்கலம், செல்லபிராட்டி, நெகனுார், ஆனாங்கூர் உள்ளிட்ட 17 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. மீதம் உள்ள ஏரிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள மலைகள், ஓடைகள் வழியாக தண்ணீர் வருகிறது. இலவச மின்சாரம் வழங்கப்பட்ட பிறகு பெரும்பான்மையான ஏரிகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுப்பதை விவசாயிகள் நிறுத்தி விட்டனர். கிணற்று பாசனம் மூலம் மட்டும் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் வராமல் போனாலும் விவசாயிகள் கவலை கொள்வதில்லை. பெரும்பாலான ஏரிகளை விவசாயிகளே ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்.ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் ஏரியில் தண்ணீர் நிரம்பாமல் இருக்க ஏரிக்கு தண்ணீர் வந்த உடன் மதகுகளை திறந்து வெளியேற்றி விடுகின்றனர். சில இடங்களில் உபரி நீர் செல்லும் இடத்தை உடைத்து தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர். வராகநதியில் வரும் மழை வெள்ளமும் கூடப்பட்டு தடுப்பணை கால்வாய் உடைந்ததால் 5 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாமல் மீண்டும் வராக நதியில் சென்று விடுகிறது. செவலபுரை தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாயும் முறையான பராமரிப்பின்றி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாமல் சங்கராபரணி ஆற்றில் சென்று விடுகிறது. சங்கராபரணி ஆற்றில் ராஜாம்புலியூரில் உள்ள தடுப்பணையைத் தவிர வேறு தடுப்பணைகள் இல்லை. கன மழை பெய்யும்போது வரும் காட்டாற்று வெள்ளம் தேக்கி வைக்க வழியின்றி வீடூர் அணைக்கு சென்று விடுகிறது. சிறிய அணையான வீடூர் அணை அடுத்தடுத்து கன மழை பெய்யும்போது விரைவாக நிரம்பி, உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது,கனமழை பெய்து ஏரிகள் நிரம்பினாலும் மீன் குத்தகை எடுப்பவர்களும், ஆக்கிரமிப்பாளர்களும் அடுத்த சில மாதங்களில் தண்ணீரை திறந்து ஏரியை வறண்டு போக செய்கின்றனர். சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை இல்லாததால் வெள்ளம் வந்தாலும் சில நாட்களிலேயே வறண்டு விடுகிறது.இதனால், செஞ்சி பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு போதிய அளவிற்கு நிலத்தடி நீர் கிடைக்காமல் கோடைகாலத்தில் பயிர்கள் காய்ந்து போகும் அவலம் ஏற்படுகிறது. வீடுகளிலும் போர்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 அடிக்கு கீழே சென்று விடுகிறது. எனவே சங்கராபரணி ஆற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மேல்களவாய் அருகே சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவினர் ஆய்வு நடத்தினர். அந்த இடம் தடுப்பணை கட்ட தகுதியான இடம் என்பதை முடிவு செய்து அரசுக்கு பரிந்துரை செய்தனர்.ஆனால், இதுவரையில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டதால் தடுப்பணை பணிகள் துவங்கவில்லை.தென்மேற்கு பருவமழை காலத்திலேயே பெரும்பான்மையான ஏரிகளுக்கு 50 சதவீதம் தண்ணீர் வந்து விட்டது. வடகிழக்கு பருவ மழையின் போது மிக விரைவில் ஏரிகள் நிறைந்து மழை நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையே ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற காட்டாற்று வெள்ளம் வீணாவதை தடுக்க தமிழக அரசு சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை