உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் புதிய பஸ் நிலையம், மருத்துவமனை திறப்பது எப்போது: அரசியல் காரணங்களுக்காக திறப்பு விழா தள்ளிப்போகிறதா?

திண்டிவனம் புதிய பஸ் நிலையம், மருத்துவமனை திறப்பது எப்போது: அரசியல் காரணங்களுக்காக திறப்பு விழா தள்ளிப்போகிறதா?

திண்டிவனம்: திண்டிவனத்தில் பணிகள் பெருமளவில் முடிந்துள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, புதிய பஸ் நிலைய பணி அரசியல் காரணங்களுக்காக ஜூன் மாதம் திறப்பு விழா நடத்துவதற்காக மீதமுள்ள பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் போதுமான கட்டமைப்பு வசதியின்றி செயல்பட்டு வந்தது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மருத்துவ கட்டமைப்பை உயர்த்தும் வகையில் 60 கோடி ரூபாய் நிதியில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணி துவங்கியது. 18 மாதங்களுக்குள் முடிப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிந்து, திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் பணிகள் முடிக்கப்படாததால் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் திறப்பு விழா நடத்த முடியவில்லை. தற்போது வரை இரண்டு பிளாக்குகளில் 95 சதவீத பணிகள் முடிந்த நிலையில், கட்டங்களை சுற்றி வாகனங்கள் வருவதற்கு புதிய சாலை மற்றும் கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருவதால், அனைத்து பணிகளும் குறைந்தது 10 நாட்களுக்குள் முடிந்துவிடும்.கடந்த டிசம்பர் மாத இறுதியில் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், திறப்பு விழா தேதி எப்போது என்பது மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை உயர் அதிகாரிகளும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர் .

புதிய பஸ் நிலையம்

திண்டிவனம் - சென்னை சாலையில், 6 ஏக்கர் பரப்பளவில், 25 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி அனைத்தும் முடிந்த நிலையில், தற்போது, பஸ் நிலையம் உள்ளே வாகனங்கள் வருவதற்கான சாலை போடும் பணிகள் மற்றும் பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் மட்டும் நிறைவு பெறாமல் உள்ளன.இந்தப்பணிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் நிறைவு பெற்று விடும் நிலையில் இருந்தாலும், திறப்பு விழா தேதியை முடிவு செய்யாமல் இருப்பதால், பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மிச்சமுள்ள பணிகளை நிறைவேற்றாமல் உள்ளனர். புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி இறுதியில் திறக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், மார்ச் மாதம் முடிய உள்ள நிலையிலும், இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என கேள்விக்குறியாக உள்ளது.ஆளுங்கட்சி பிரமுகர்கள் மேடைக்கு மேடை, திண்டிவனத்தில் தி.மு.க., ஆட்சியில்தான் மாவட்ட தலைமை மருத்துவமனை, புதிய பஸ் நிலையம் கொண்டு வந்ததாக கூறி வந்தாலும், இந்த இரண்டையும் குறித்த காலக்கெடுவிற்குள் திறக்காமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டே போவதற்கு காரணம் தெரியவில்லை.இதற்கிடையே வரும் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று மாவட்ட தலைமை மருத்துவமனை, புதிய பஸ் நிலையம் இரண்டையும் முதல்வர் திறந்து வைப்பார். அதற்காகத்தான் 95 சதவீதம் முடிந்த நிலையில் இன்னும் பணியை ஜவ்வாக இழுத்துச் செல்கின்றனர் என ஆளுங்கட்சியினர் பேசி வருகின்றனர்.பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ஜூன் மாதம் வரை காத்திருக்காமல், பணிகளை விரைவில் முடித்து, மாவட்ட தலைமை மருத்துவமனை, பஸ் நிலையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பதே பொது மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ