மாணவர்களிடையே கஞ்சா குறித்த விழிப்புணர்வு போலீசுடன் மருத்துவ துறை இணையுமா?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறந்தது. இந்த மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு பிறகு அரசு எடுத்த நடவடிக்கையால் பெருமளவு குறைந்துள்ளது.ஆனால் அதை விட ஆபத்தான கஞ்சா பழக்கம் தற்போது 2 மாவட்டங்களிலும் வேகமாக ஊடுருவியுள்ளது. கள்ளச்சாராயத்தை விட கஞ்சாவுக்கான செலவு மிக குறைவு. ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு கொண்டு செல்வதிலும், விற்பனை செய்வதிலும் எதிர்கொள்ளும் பிரச்னையும் குறைவு. இதனால் கள்ளச்சாராயத்தின் இடத்தை கஞ்சா மிக விரைவாக பிடித்து விட்டது.குறிப்பாக 10 வயது சிறுவர்களில் துவங்கி, 25 வயது இளைஞர் வரை உள்ளவர்களை குறி வைத்து கஞ்சாவை விற்பனை செய்கின்றனர்.போலீசார் மொத்தமாக கஞ்சா விற்பனை செய்பவர்களையே கண்டுபிடித்து கைது செய்கின்றனர். சில்லைரை விற்பனையில் ஈடுபடுபவர்களையும், கஞ்சா பயன்படுத்துபவர்களையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.ஏழ்மை நிலை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர், இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இவர்கள் கஞ்சா போதையில் குற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.இவர்களுக்கு கஞ்சா குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த பழக்கம் துவங்கும் வயதை உடையவர்களில் பெரும் பகுதியினர் பள்ளி, கல்லுாரி மாணவர்களாக உள்ளனர். பள்ளி, கல்லுாரிகளில் போலீசார் ஆண்டுக்கு ஒரு முறை உயரதிகாரிகளுக்கு கணக்கு காட்ட போதை பழக்கத்திற்கு எதிராக ஒரு மணி நேரம் மட்டும் பிரசாரம் செய்கின்றனர்.அதன்பிறகு மாணவர்கள் மத்தியில் எந்த விழிப்புணர்வு பிரசாரமும் இல்லை. எனவே பள்ளி கல்வித் துறையினரும், மருத்துவத் துறையினரும் இணைந்து, சிரத்தை எடுத்து ஒப்புக்கு நடத்தாமல் தரமான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.மருத்துவத் துறையினர் கஞ்சாவினால் எதிர்காலத்தில் ஆண் மலட்டுத்தன்மை, ஆண்மை குறைபாடு ஏற்படும் என்பதை மாணவர்களிடம் எடுத்துரைத்து உடல் ரீதியான பாதிப்புகளை சொல்ல வேண்டும். இதனால் மாணவர்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டு புதியவர்கள் இந்த பழக்கத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும்.பள்ளி கல்வித் துறையினர், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம், தன்னம்பிக்கை ஏற்படுத்த சிறப்பு பேச்சாளர்களை கொண்டு நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களை, சாதனையாளர்களை கொண்டு நடத்த வேண்டும்.கஞ்சா பழக்கம் இருந்தால் சமூகத்தினாலும், உறவினர்களாலும் ஒதுக்கப்படுவோம் என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். எனவே பள்ளிக் கல்வித்துறையினர் மிக விரைவாக இதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் மாணவர் சமுதாயத்தை பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.