மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மூதாட்டியை கொலை செய்து, நகை பறித்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூரைச் சேர்ந்த தாண்டவராயன் மனைவி இந்திராணி,72; இவரது பிள்ளைகளான பன்னீர்செல்வம், ரவிச்சந்திரன், தேன்மொழி, இந்துமதி, தேவி ஆகியோருக்கு திருமணமாகி, வெளியூரில் வசித்து வருகின்றனர். தாண்டவராயன் மறைவுக்குப் பிறகு இந்திராணி தனியாக வசித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் சிவசங்கர்,24; தனது டெக்கரேஷன் தொழிலுக்காக, இந்திராணியின் மகள்களான தேவியிடம் ரூ.22 ஆயிரம், தேன்மொழியிடம் ரூ.8 ஆயிரம் கடன் வாங்கி, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.இதற்கிடையே சிவசங்கர், தனது மனைவியுடன் சேலத்திற்கு சென்று விட்டார். இந்திராணி, தனது மகள்களுக்கு தரவேண்டிய கடனை திருப்பித்தரும்படி, சிவசங்கரின் தாய் குப்புவிடம்,46; கேட்டு வந்துள்ளார். இதனால், இந்திராணி மீது சிவசங்கருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. கடந்த 18.12.2022ம் தேதி மாரங்கியூருக்கு சிவசங்கர் வந்தார். இதையறிந்த இந்திராணி, அங்கு சென்று பணத்தை தரும்படி சிவசங்கர், குப்பு ஆகியோரிடம் கேட்டுள்ளார்.அப்போது இந்திராணி அணிந்திருந்த நகைகளை கவனித்த சிவசங்கர், அவரை கொலை செய்து நகைகளை பறிக்க திட்டம் தீட்டினார். மறுநாள் காலை 7.30 மணிக்கு, சிவசங்கர், பணம் தருவதாக கூறி தனது வீட்டிற்கு இந்திராணியை அழைத்துச்சென்றார்.வீட்டில், இந்திராணியை கட்டையால் தாக்கி கொலை செய்து, அவர் அணிந்திருந்த 5 சவரன் நகைகளை பறித்துக்கொண்டார். பிறகு, வீட்டின் பூஜை அறையில் பள்ளம் தோண்டி, உடலை புதைத்துவிட்டார். இதற்கு, குப்பு உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவசங்கர், குப்பு இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன், குற்றவாளியான சிவசங்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், குப்புவை விடுவித்தும் நேற்று தீர்ப்பளித்தார். சிவசங்கர், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.