சுட்டெரிக்கும் வெயிலுக்கு சீரான குடிநீர் சப்ளை அவசியம்; வீணாவதை தடுக்க தேவை நடவடிக்கை
மாவட்டத்தில் கோடை துவங்குவதற்கு முன் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, தண்ணீரைத் தேடி மக்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று குடிநீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல இடங்களில் குடிநீர் கேட்டு போராட்டங்கள் நடக்கும். இதை கருத்தில் கொண்டு தாமிரபரணி, வைகை குடிநீர் திட்டங்கள், உள்ளூர் குடிநீர் திட்டத்தின் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.கோடை நேரத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கடும் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சராசரியாக ஒரு ஆணுக்கு தினமும் 3 லிட்டர், பெண்ணுக்கு இரண்டரை லிட்டர், கர்ப்பிணிக்கு 3 லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. இதர தேவைகளுக்கு தனி நபருக்கு 15 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சப்ளையில் பிரச்னை ஏற்பட்டால் கடுமையாக பாதிக்கக் கூடும்.பழுது ஏற்பட்டால், கண்டறிந்து உடனுக்குடன் சீரமைப்பதன் மூலம் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியும். உள்ளூரில் உள்ள தரைத்தள தொட்டிகள், மேல்நிலை தொட்டிகள் சேதம் அடைந்திருந்தால் குடிநீர் வீணாகும் வாய்ப்பு உள்ளது. இவற்றை உரிய நேரத்தில் மராமத்து செய்து வீணாவதை தடுக்க வேண்டும். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், ஊராட்சி செயலர்கள் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.இதில் எந்த தலையிடும் இருக்க வாய்ப்பு இல்லை. உடனுக்குடன் சீரமைத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் உடைந்து நாள் கணக்கில் குடிநீர் வீணாவதை கண்டும் காணாமல் விட்டு விடாமல் உடனுக்குடன் சரி செய்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். நிதி பற்றாக்குறையால் உரிய நேரத்தில் மராமத்து பணிகளை செய்ய காலதாமதம் செய்யக்கூடாது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் தவியாய் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் குடிநீர் சப்ளையை சீராக வழங்கவும், வீணாவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.