| ADDED : மார் 28, 2024 05:28 AM
சிவகாசி: கண்மாய், கரை முழுவதும் சீமை கருவேல மரங்கள், மடைகள் சேதம் என வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் பாண்டியன் குளம் கண்மாய் சீரழிந்து வருகிறது.வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளத்தில் பாண்டியன் குளம் கண்மாய் உள்ளது. 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் 300 ஏக்கர் பாசன வசதி உடையது. இந்தக் கண்மாயை நம்பி நெல், பருத்தி, உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. விவசாயத்திற்காக தண்ணீர் வெளியேறும் வகையில் கண்மாயில் நான்கு மடைகள் உள்ளது.ஆனால் 2 மடைகள் சேதமடைந்து துார்ந்து விட்டது. வெம்பக்கோட்டை கண்மாய் நிறைந்து இந்த கண்மாய்க்கு ஓடை வழியாக தண்ணீர் வர வேண்டும். ஆனால் ஓடை துார்வாரப்படாமல் தண்ணீர் வர வழி இல்லை. இதனால் விவசாயம் முற்றிலும் பொய்த்து விட்டது. கண்மாய் விஜய கரிசல்குளம், வி.மீனாட்சிபுரம் கணஞ்சாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது. கண்மாய்க்கு தண்ணீர் வராததால் தற்போது குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது. ஆனால் கண்மாய்க்குள் மட்டுமல்லாமல் கரையிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும் கரையும் பலவீனமான நிலையில் உள்ளது.