| ADDED : ஜூலை 13, 2024 07:04 AM
சிவகாசி, : தினமலர் நாளிதழல் செய்தி எதிரொலியாக திருத்தங்கல் ரங்கா நகரில்வாறுகால் அமைப்பதற்கு சிவகாசி அசோகன் எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கினார்.சிவகாசி அருகே திருத்தங்கல் ரங்கா நகரில் உள்ள நான்கு தெருக்களில் இதுவரையிலும் ரோடு, வாறுகால் வசதி இல்லை. இதனால் வீட்டுக் கழிவு நீர் வெளியேற வழி இல்லை. இதுகுறித்து மாநகராட்சியில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு ரோடு போடுவதற்காக பணிகள் துவங்கியது. ஆனால் வாறுகால் வசதி ஏற்படுத்தாமல் ரோடு மட்டும் அமைக்க இருந்ததால் அதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. வாறுகால் அமைக்காததால் தெருக்களில் குடியிருப்புகளின் கழிவுநீர், மழை நீர் வெளியேற வழி இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி தெருவிலேயே தேங்கி விடுகின்றது. எனவே வாறுகால் அமைத்து ரோடு போட வேண்டும் என தினமலர் நாளிதழ்குடியிருப்போர் குரல் பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அசோகன் எம்.எல்.ஏ., அங்கு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் வாறுகால் அமைப்பதற்காக எம்.எல்.ஏ., நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கினார். இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.