| ADDED : ஜூலை 05, 2024 04:23 AM
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே கோடையில் போதியளவு கண்மாயில் தண்ணீர் இருந்தும் வாய்க்கால் சீரமைக்காமல் வைத்துள்ளதால் கண்மாய் ஒட்டிய நெல் விளையும் நிலங்களை தரிசாக வைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.சத்திரப்பட்டி அடுத்த கீழ ராஜகுல ராமன் பெரிய கண்மாய். பெயருக்கு ஏற்றவாறு மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய கண்மாய் அடுத்து ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பளவு பகுதியை கொண்டுஉள்ளது.இக் கண்மாயிலிருந்து வடக்கு பகுதி மடையில்இருந்து வாய்க்கால் வழியே அடுத்துள்ள ரெட்டியபட்டி கண்மாய்க்கு 2 கி.மீ., தொலைவிற்கு தண்ணீர்அனுப்பும் அமைப்பு உள்ளது.வாய்க்கால் வழியே கண்மாய் ஒட்டியுள்ள பாசன பகுதிக்கு தண்ணீர் வெளியேற வேண்டும். இதன் மூலம் அதிக தண்ணீர் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை விவசாயம் நடைபெறும். இந்நிலையில் மடையில் தண்ணீர் வெளியேறினாலும் கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால் பராமரிப்பு செய்யாததால் சிதிலமடைந்து மண்மேவி விட்டது. இதனால் கிணற்று பாசன விவசாயிகள் மட்டும் கோடை விவசாயத்தை செய்து மற்றவர்கள் தரிசாக விட்டுள்ளனர்.கண்மாயில் தண்ணீர் இருந்தும் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.பொன்ராஜ், விவசாயி: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நிலை ஏற்பட்டபோது தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டபின் வாய்க்கால் சரி செய்து அந்த ஆண்டு விவசாயம் செழித்தது. தற்போது மீண்டும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் மட்டும் கிணற்று பாசனத்தை வைத்து விவசாயம் செய்கின்றனர். இதனால் 40 சதவீத விவசாய நிலங்கள் தண்ணீர் பிரச்னையால் புதர்களும், முள் செடிகள்முளைத்தும் காணப்படுகிறது. விவசாயத்தை காப்பாற்ற சிறப்பு நிதியை ஒதுக்கி வாய்க்காலை சரி செய்ய வேண்டும்.