| ADDED : ஏப் 25, 2024 05:23 AM
சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வணிக வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி பஸ் ஸ்டாண்டில் தினமும் 300 க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அருகிலுள்ள கிராமங்கள் தவிர சாத்துார், விருதுநகர், ஸ்ரீவி., ராஜபாளையம் உள்ளிட்ட நகரிலிருந்து பல்வேறு பணி நிமித்தமாக ஏராளமானோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணி 5 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. ரூ. 2 கோடி செலவில் பணிகள் நடந்து முடிந்தும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. கட்டப்பட்ட வணிக வளாகங்கள் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதே போல் டிரைவர்கள், நடத்துநர்கள் அறை , புக்கிங் அறை, பயணிகள் காத்திருக்கும் அறை மாற்றுத் திறனாளிகள் அறை கட்டப்பட்டும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதே நிலை நீடித்தால் இக்கட்டடங்கள் விரைவில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.