| ADDED : மே 21, 2024 07:11 AM
விருதுநகர்: இடியும் நிலையில் உள்ள சமுதாய கூடம், கலையரங்கம், திறக்கப்படாத நுாலகம், சேதமான ரோடு, ஊராட்சி அலுவலகம் என எண்ணற்ற சிரமங்களுடன் வசித்து வருகின்றனர் விருதுநகர் வீரசெல்லையாபுரம் ஊராட்சி மக்கள்.விருதுநகர் அருகே வீரசெல்லையாபுரம் ஊராட்சியில் பிரதான ரோடு சேதமாகி சேரும், சகதியுமாக உள்ளது. இங்குள்ள சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளை கடந்தும் முறையாக பராமரிக்காததால் கூரை பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. மேலும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கூட போதிய இட வசதி இல்லாமல் இப்பகுதியினர் தவித்து வருகின்றனர். மேலும் தனியார் திருமண மண்டபங்களில் அதிக வாடகை கொடுத்து விசேஷங்களை நடத்த வேண்டியுள்ளது. ஊரில் நடக்கும் திருவிழாக்களின் போது கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக கட்டப்பட்ட கலையரங்கம் போதிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து உள்ளது. ஊராட்சியில் கலையரங்கம் இருந்தும் எவ்வித பிரோயஜனமும் இன்றி உள்ளது.ஊராட்சி அலுவலக் கட்டடம் கட்டி 20 ஆண்டுகளை கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால் முன் பகுதியில் உள்ள கூரைப் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விட்டது. இங்கு வரி செலுத்துவதற்காக வரும் மக்கள், பணியாளர்கள் அச்சத்துடன் வந்து செல்லகின்றனர்.இங்குள்ள நுாலகம் பல மாதங்களாக பணியாளர் நியமிக்கப்படாமலும், எவ்வித நுால்களும் இன்றி பூட்டியே கிடக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பணியாளர் தேர்வுக்கு படிப்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமத்தில் உள்ளனர். சுகாதார வளாகம் கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருப்பதால் திறந்த வெளி கழிப்பிடம் அதிகரித்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.