| ADDED : ஜூன் 17, 2024 12:10 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதி கண்மாய்களின் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்துாரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் மம்சாபுரம் வாழைக்குளம், வேப்பங்குளம், முதலியார்குளம் கண்மாய்களும், நகர் பகுதியில் மறவன்குளம், மொட்டபெத்தான், வடமலைக்குறிச்சி, செங்குளம், வத்திராயிருப்பில் புதுப்பட்டி, கான்சாபுரம், சுந்தரபாண்டியம், வத்திராயிருப்பு, கூமாபட்டி, நெடுங்குளம், கோட்டையூர், நத்தம்பட்டி கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்பியது. இதனால் நெல் உட்பட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை நெல் சாகுபடி அறுவடையும் தற்போது செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கண்மாய்களில் உள்ள தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்து, அடுத்த முறை விவசாயத்திற்கு கை கொடுக்குமா என எதிர்பார்க்கின்றனர்.