| ADDED : ஜூலை 09, 2024 04:42 AM
விருதுநகர்: விருதுநகர் கோல்வார்பட்டி அணை அருகே 13ம் நுாற்றாண்டு பிற்கால பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வு குழுவினர்கள் விருதுநகர்அருகே கோல்வார்பட்டியில் உள்ள சிவன் கோயிலை பார்வையிடும் பணியில் கோல்வார்பட்டியிலிருந்து ஏ.புதுப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் சென்ற போது அணையின் மதகுகளுக்கு முன்னால் இடது கரையில் உள்ள பாறையில் ஒரு புதிய கல்வெட்டு பாறையில் செதுக்கப்பட்ட நிலையில் இருந்ததை தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, உதவி தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, உதவி கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன், விருதுநகர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பால்துரை ஆகியோரால் கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: இக்கல்வெட்டு பாறையில் 1.5 x 1.5 அடி சதுர வடிவமாக செதுக்கப்பட்டு அதில் தமிழ் எழுத்துக்கள் அழகாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் 'எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர தேவர்' எனவும், அவருடைய 28ம் ஆட்சியாண்டினையும் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. அதன்படி கணக்கிட்டால் 13ம் நூற்றாண்டைச் சார்ந்த பிற்காலப் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் குலசேகரனுடைய கல்வெட்டாக இதை கருதலாம்.மேலும் கோல்வார்பட்டி சிவன் கோயிலின் முன்பு உள்ள தனிக்கல்லில் உள்ள குலசேகரனின் 16ம் ஆட்சியாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றும் பிற ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அர்ஜூனா ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இதில் நீர்மேலாண்மை அல்லது நீர்ப்பாசனம் குறித்த கல்வெட்டாக இருக்க வாய்ப்புஉள்ளது, என்றனர். மேலும் இக்குழுவினரால் செந்நெல்குடியில் உள்ள பழமையான கோவிலில் உள்ள கல்வெட்டுகளும் ஆவணப்படுத்தப்பட்டன.