விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., 2009, 2019, 24 என மூன்று முறையும் காங். இடம் தோற்றுள்ளது.லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4379 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது முறை எம்.பி., ஆனார். இவர் முதன் முதலாக 2009ல் தி.மு.க., கூட்டணி வைத்து போட்டியிட்ட போது 3,07,187 ஓட்டுக்கள் பெற்று 15,764 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.2014ல் காங். தனித்து போட்டியிட்டதில் வெறும் 38,482 ஓட்டுக்களே பெற்று டிபாசிட் இழந்தார். 2019ல் மீண்டும் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து 4,70,883 ஓட்டுக்கள் பெற்று 1,54,554 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றார். தற்போது 2024ல் அதே கூட்டணியில் 3,85,256 ஓட்டுக்கள் பெற்று 4379 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.இவர் மூன்று முறை எம்.பி., ஆன தேர்தலில் இவரை எதிர்த்து தே.மு.தி.க.,வும் விருதுநகரில் போட்டியிட்டுள்ளது. அதில் 2019, 24 தேர்தல்களில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது. 2009ல் அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., வைகோ இரண்டாமிடம் பெற்றுள்ளார்.2009ல் தே.மு.தி.க., வேட்பாளராக பாண்டியராஜன் போட்டியிட்ட நிலையில் 1,25,229 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். 2019ல் தே.மு.தி.க., அழகர்சாமி 3,16,329 ஓட்டுக்கள் பெற்றார். தற்போது விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் 3,80,877 பெற்ற சொற்ப ஓட்டு வித்தியாசத்தை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மூன்று முறை காங். இடம் வீழ்ந்துள்ளதால் விருதுநகர் தே.மு.தி.க.,வினர் சோர்வடைந்துள்ளனர்.2009ல் தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டு மட்டுமே 1,25,229 ஓட்டுக்கள் பெற்றுள்ளது. ஆனால் காங்கிரசோ தனித்து போட்டியிட்ட 2014ல் 38,482 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளது. காலம் மாறி வருவதால் கட்சிகளின் காட்சியும், கோலமும் மாறி வருகிறது. இருப்பினும் விருதுநகர் தொகுதியில் காங்கிரசிடம் தே.மு.தி.க., வெற்றி பெறுவது சிம்ம சொப்பனமாகவே உள்ளது.