உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாயில் விடப்படும் சாயக் கழிவுகள்

கண்மாயில் விடப்படும் சாயக் கழிவுகள்

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய கண்மாய் சாய கழிவுகள் விடப்பட்டும், ஆகாயத்தாமரைகள் அடர்த்தியாக வளர்ந்தும் கண்மாயை பாழாக்குகின்றன.பெரிய கண்மாய் 127 ஏக்கரில் உள்ளது. நகரின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. கண்மாயின் உட்பகுதியில் மரங்கள் வளர்ந்து குளிர்ச்சியான சூழல் இருப்பதால் ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கி செல்லும். காலப்போக்கில் கண்மாய் பராமரிப்பு இன்றி போனதால், ஆகாய தாமரைகள் அடர்த்தியாக வளர்ந்து கண்மாய் தண்ணீரை உறிஞ்சுகின்றன.மேலும் சொக்கலிங்கபுரம், திருநகரம், தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விடப்படும் சாயப்பட்டறை கழிவுகள் கண்மாயில் தான் கலக்கின்றன. இதில் ஏற்படும் துர்நாற்றத்திற்கும், தண்ணீர் இல்லாததாலும் வெளிநாட்டு பறவைகள் இந்த கண்மாய்க்கு வருவதை நிறுத்தி விட்டன. கண்மாயில் சாயக் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் உட்பட உயிரினங்கள் எதுவும் இல்லை. கண்மாயில் குளித்தாலும் அரிப்பு ஏற்படுவதாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.ஒரு காலத்தில் விவசாயத்திற்கு நன்கு பயன்பட்டு வந்த இந்த கண்மாய் தண்ணீர், தற்போது சாய கழிவுகள் சேர்வதால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு இந்த தண்ணீரை பயன்படுத்துவது இல்லை. குளித்தாலும் அரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். சவுண்டம்மன் கோயில் பகுதியில் வெளியேறும் சாயக்கழிவுகள் வாறுகாலில் விடப்பட்டு அவை பிரதான வாறுகால் வழியாக பெரிய கண்மாயில் கலக்கிறது.இதேபோன்று புளியம்பட்டி, திருநகரம் பகுதிகளில் சாயக் கழிவுகள் ஓடைகள் வழியாக பெரிய கண்மாயில் கலக்கிறது. இதுகுறித்து நகராட்சி நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறது. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாவட்ட நிர்வாகம் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ