| ADDED : ஜூலை 07, 2024 11:45 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் எந்த வித பாதுகாப்பும் இன்றி ஆபத்தான முறையில் மின் கம்பங்களை ஏற்றி செல்கின்றனர்.அருப்புக்கோட்டை -- திருச்சுழி ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. திருச்சுழி நரிக்குடி சுற்றியுள்ள நுாற்றுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் டூவீலர்களில் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லுாரி வாகனங்கள் இந்த ரோட்டை கடக்கின்றன. எந்த நேரமும் வாகனங்கள் அதிக அளவில் இந்த செல்லும் இந்த ரோட்டில், கனரக வாகனங்கள் மணல், ஜல்லி, கற்கள் ஆகியவற்றை மூடியிட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லாமல் திறந்தவெளியில் கொண்டு செல்கின்றனர்.இதனால், வாகனங்களில் இருந்து மணல் சிதறி அந்த வழியாக டூவீலர்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. லாரிகளில் திறந்த வெளியில் கற்களை கொண்டு செல்லும் போது வேகத்தடையில் ஏறி இறங்கும்போது கற்கள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. வாகனங்களில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் போர்களை ஏற்றி செல்கின்றனர்.இவ்வாறு செல்லும் போது ரோடு முழுவதும் அடைத்து பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மின்வாரியத்தினர் மின்கம்பங்களை பாதுகாப்பாக கொண்டு செல்லாமல் ஒரு டிராக்டரில் ஆபத்தான முறையில் கொண்டு செல்கின்றனர். மின்கம்பங்களின் ஒரு பகுதி ரோட்டை உரசி செல்வதால் ரோடு சேதம் அடைகிறது. போக்குவரத்து போலீசார் இவற்றை கண்காணித்து வாகனங்களில் முறையாகவும், பாதுகாப்பாகவும் பொருட்களைக் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும்.