உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலி நகைகள் அடகுவைக்கும் கும்பல் அதிகரிப்பு

போலி நகைகள் அடகுவைக்கும் கும்பல் அதிகரிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் சில கூட்டுறவு கடன் சங்கங்களில் அவசர தேவை என்று கூறி நகையை அடகு வைக்க வேண்டும் என போலி நகைகள் வைக்கும் கும்பல்வலம் வருவது அதிகரித்துஉள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். மாவட்டத்தில் 290 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சில சங்கங்களில் மர்மநபர்கள் சிலர் சென்று தன் பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்துள்ளேன், சிகிச்சைக்கு அவசரமாக நகையை அடகு வைக்க வேண்டும் என்று கூறி நுழைந்து தங்க முலாம் பூசிய வெள்ளி நகைகளை அடகு வைக்கின்றனர். மேலும் அவர்கள் கொடுக்கும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களும் போலியாக உள்ளன. இதனால் ரூ.60 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வங்கிகளில் நகையை வைத்து மோசடி செய்கின்றனர். சமீப நாட்களாக இந்த புகார் மாவட்டத்தின் சில கூட்டுறவு சங்கங்களில் எழுந்து வருகிறது. கண்ணால் பார்த்தாலும், உரை கல்லில் வைத்து உரசி பார்த்தாலும் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு நுாதனமான முறையில் போலி நகைகளை தயாரிக்கின்றனர். அறுத்து பார்த்தால் மட்டுமே போலி நகை என கண்டுபிடிக்க முடியும். வெளிப்பூச்சாக தங்கத்தை பூசி ஏமாற்றும் இந்த கும்பல் சாதுர்யமாக செயல்பட்டு தப்பிக்கிறது. அதாவது அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் ஒன்றான ஆதாரை ஏதாவது குடிமகனிடம் கொஞ்சம் பணம் கொடுத்து பெற்று சமர்ப்பிக்கின்றனர். இதனால் கூட்டுறவு வங்கிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. செயலாளர்கள்,சங்க ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வேகமாக பரவி வரும் இந்த பிரச்னைக்கு போலீசார் விரைந்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லாவிடம் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ