| ADDED : ஜூலை 03, 2024 05:27 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியான திருக்குமரன் நகர் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வாறுகால், ரோடுகள் இல்லாமல் அவதிப்படுவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர்.திருக்குமரன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளான தலைவர் கருப்பையா, செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சரவணன், உப தலைவர் கோமதி, உறுப்பினர்கள் பானு, அழகர்சாமி, சங்கரநாராயணன், பொன்னு லட்சுமி கூறியதாவது: எங்கள் பகுதியில் தலையாய பிரச்சனை தெருக்களில் ரோடுகள், வாறுகால்கள் இல்லாதது தான். நாங்கள் 15 ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம், கலெக்டர், முதல்வர் செல் ஆகியோர்களுக்கு ரோடுகள், வாறு கால் அமைக்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.மெயின் ரோட்டில் இருந்து 9, 10வது தெருக்களுக்கு வரும் ரோடு கற்கள் பெயர்ந்து மேடும் பள்ளமுமாக உள்ளது. வாகனங்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றன. மழைக்காலமானால் சேறும் சகதியுமாக மழை வெள்ளம் தேங்கி தெருவில் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தெருக்களில் வாறுகால்களும் முறையாக அமைக்கப்படவில்லை. பல தெருக்களில் வாறுகாலே இல்லை. வீடுகளின் கழிவு நீர் காலி பிளாட்டுக்களில் தான் விடப்படுகிறது. இதனால் அதன் உரிமையாளர்களுக்கும், அருகில் உள்ள வீட்டில் இருப்பவர்களுக்கும் பிரச்சனை வருகிறது. வாறுகால்களில் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்து விஷ பூச்சிகள், பாம்புகளின் புகலிடமாக உள்ளது. தெருக்களில் பாம்புகள் சர்வ சுதந்திரமாக நடமாடுகின்றன. தெரு விளக்குகளும் போதுமானதாக இல்லை. தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் தெருக்களில் வருபவர்களை விரட்டி கடிக்கிறது. கூட்டமாக சுற்றி திரிவதால் அவற்றை விரட்ட மக்கள் அச்சமடைகின்றனர். ஊராட்சியின் தூய்மை பணியாளர்கள் இந்த பகுதிக்கு வருவதே இல்லை. காலியாக உள்ள பிளாட்டுகளில் அதிக அளவில் சீமை கருவேலங்கள் வளர்ந்துள்ளது. இவற்றை அப்புறம் படுத்த வேண்டும். திருக்குமரன் நகரில் 1 முதல் 10 தெருக்கள் உள்ளன. மெயின் ரோட்டில் இருந்து தெருக்களுக்கு செல்லும் ரோடு முறையாக இல்லை. ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதிக்கு ரோடுகள், வாறுகால்கள் போர்க்கால அடிப்படையில் கட்டி தர வேண்டும், என்றனர்.